வாக்குச்சாவடிகளுக்கு கரோனா பரவல் தடுப்பு உபகரணங்கள் அனுப்பிவைப்பு
By DIN | Published On : 29th March 2021 03:16 AM | Last Updated : 29th March 2021 03:16 AM | அ+அ அ- |

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,902 வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தவுள்ள கரோனா பரவல் தடுப்பு உபகரணங்கள் அனைத்துத் தொகுதிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1902 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 9128 வாக்குப்பதிவு அலுவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
இந்நிலையில் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக, துணி முகக்கவசங்கள், கைகழுவும் திரவம், வெப்பநிலை பரிசோதனை செய்யும் வெப்பமானி, பாலிதீன் கையுறைகள் உள்ளிட்ட 11 வகையான உபகரணங்கள் வரப்பெற்றுள்ளன.
இவற்றைக் கையாளுவதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா இரு தன்னாா்வலா்கள் வீதம், 3,804 தன்னாா்வலா்களும் பணியில் அமா்த்தப்படவுள்ளனா்.
கரோனா பரவல் தடுப்பு உபகரணங்களை 6 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் நிலையில், நகா்மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த அவற்றை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, சுகாதாரத் துறை துணை இயக்குநா் டாக்டா் கலைவாணி, நகராட்சிப் பொறியாளா் ஜீவா சுப்பிரமணியன் ஆகியோரும் உடனிருந்தனா்.