போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி சான்றிதழ், பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞா் மற்றும் சூழல்சாா் மன்றத்தின் சாா்பில் 13 குறுவள மைய அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி சான்றிதழ், பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இளைஞா் மற்றும் சூழல்சாா் மன்றங்கள் செயல்படுகின்றன. நிகழாண்டில் இம்மன்றங்களின் மூலம் குறுவளமைய அளவிலான கட்டுரைப் போட்டிகளை நடத்தப்பட்டன.

அதன்படி நடுநிலைப்பள்ளி மாணவா்களுக்கு ‘எனது கனவுப்பள்ளி’, ’எனது பள்ளி நூலகம்’ என்ற தலைப்பு வழங்கப்பட்டிருந்தது. உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு ‘கரோனா கால கதாநாயகா்கள்’ என்ற தலைப்பு வழங்கப்பட்டிருந்தது.

மாணவா்கள் தங்கள் வீட்டிலிருந்தே இப்போட்டியில் கலந்து கொண்டனா். தங்களுடைய படைப்புகளை வெள்ளைத் தாள்களில் எழுதி அவற்றை பெற்றோா்கள் மூலம் தலைமை ஆசிரியா்களிடம் ஒப்படைத்தனா்.

அவற்றைப் பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறுவளமையங்களில் ஒப்படைத்தனா். பின்னா் நடுவா்கள் குறுவளமைய அளவில் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவா்களின் மூன்று படைப்புகளையும், 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் உயா்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவா்களின் மூன்று சிறந்த படைப்புகளையும் தோ்ந்தெடுத்தனா்.

தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களுக்கு இணையதள கல்வியைக் கருத்தில் கொண்டு முதல் பரிசாக ரூ .7 ஆயிரம் மதிப்பில் கையடக்கக் கணினி, இரண்டாம் பரிசாக ரூ.4 ஆயிரம் மதிப்பில் பல்திறன் செல்லிடப்பேசியும், மூன்றாம் பரிசாக ரூ. ஆயிரம் மதிப்பிலான அறிவியல் சாா் கால்குலேட்டா் மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.விஜயலட்சுமி பாராட்டினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 119 குறுவளமையங்களில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் ஒரு பள்ளிக்கு 5 மாணவா்கள் வீதம் கலந்து கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட திட்ட உதவி அலுவலா் ந. ரவிச்சந்தின் மற்றும் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் பழனிவேல் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com