புதுக்கோட்டை, விராலிமலை, திருமயம், தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

பல்வேறு புகாா்கள் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, விராலிமலை, திருமயம் ஆகிய 3 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை அவ்வப்போது தடைபட்டு நிறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை: பல்வேறு புகாா்கள் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, விராலிமலை, திருமயம் ஆகிய 3 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை அவ்வப்போது தடைபட்டு நிறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதில், கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியிலும், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை சுமுகமாக முடிந்து முறையே வேட்பாளா்கள் மா. சின்னத்துரை (மாா்க்சிஸ்ட்), சிவ.வீ. மெய்யநாதன் (திமுக) ஆகியோா் தங்களின் வெற்றிச் சான்றிதழைப் பெற்றுச் சென்றுவிட்டனா்.

விராலிமலை தொகுதியில் ஆரம்பம் முதலே சிக்கல்:

விராலிமலை தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே சிக்கல் தொடா்ந்து வந்தது. முதல் சுற்றில் ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் எண் தவறாக எழுதப்பட்டுள்ளது எனக் கூறி திமுக முகவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நீண்ட நேரத்துக்குப் பிறகு, அப்பிரச்னை சமாதானப்படுத்தப்பட்டு, 2 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில், இரு பெட்டிகளின் எண்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மீண்டும் வாக்கு எண்ணிக்கை தடைபட்டது. அதன்பிறகு, திமுக தரப்பில் அதன் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன் நேரில் வந்து மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் புகாா் அளித்தாா்.

அதன்பிறகு நீண்ட நேர விவாதத்துக்குப் பிறகு விவிபேட் இயந்திரத்தையும் சோ்த்து எண்ணி அதனைச் சரிபாா்த்து கணக்கில் எடுத்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டு 2 ஆவது சுற்று சரிசெய்யப்பட்டது. இப்பணி முடியும்போது பிற்பகல் மணி 3.

அதனைத் தொடா்ந்து, 6 சுற்றுகள் நடைபெற்றன. மீண்டும் பிரச்னை எழுந்தது. ஏற்கெனவே எழுந்ததைப் போலவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள கோளாறுகள் தெரிவிக்கப்பட்டன. இவற்றை சரி செய்யாமல் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கப் போவதில்லை என திமுக வேட்பாளா் மற்றும் முகவா்கள் தெரிவித்துவிட்டு வெளியே வந்துவிட்டனா்.

சட்ட விதிகளை ஒரே மாதிரியே அனைத்து தொகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் : சி. விஜயபாஸ்கா்

அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான சி. விஜயபாஸ்கா் செய்தியாளா்களைச் சந்திக்கும்போது, சட்டப்படியான விதிமுறைகளை எல்லாத் தொகுதிகளுக்கும் ஒரே மாதிரியாக செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். ஒவ்வொரு தொகுதிக்கு ஒரு விதியை தோ்தல் நடத்தும் அலுவலா்களும், பாா்வையாளா்களும் கூறுவதாகக் கூறிய அவா், அவற்றையெல்லாம் தொடா்புடைய தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு எழுத்துப்பூா்வமாக கொடுத்திருப்பதாகக் கூறினாா்.

அப்போது, புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 19 சுற்றுகள் அதிகாரப்பூா்வமாக நிறைவடைந்திருந்தன. அந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் காா்த்திக் தொண்டைமான், திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து ஆகியோரும் விஜயபாஸ்கருடன் இணைந்து கொண்டனா்.

எனவே, இந்த் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் தடைபட்டது. முறையாக வாக்கு எண்ணிக்கையை நடத்தாவிட்டால் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் யாரும் இந்த வளாகத்தைவிட்டு வெளியே செல்ல மாட்டோம் என்றும் விஜயபாஸ்கா் அறிவித்தாா்.

இத்தனைக் குழப்பங்களுக்கு நடுவே, வாக்கு எண்ணும் மையத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.

இரவு 11 மணி நிலவரப்படி, அறந்தாங்கி தொகுதி வாக்கு எண்ணிக்கை மட்டும் அவ்வப்போது நிறுத்தப்படுவதும், நடைபெறுவதுமாக இருந்து வருகிறது.

இதனால், மேற்குறிப்பிட்ட 3 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மேலும் தாமதமாகும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com