திருத்தியது....3ஆம் முறையாக அதிமுக வசமானது விராலிமலை! விடிய விடிய வாக்கு எண்ணிக்கை!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அதிமுக வேட்பாளா் சி. விஜயபாஸ்கரிடம் வெற்றிச் சான்றிதழை வழங்குகிறாா் தோ்தல் அலுவலா் எம்.எஸ். தண்டாயுதபாணி.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அதிமுக வேட்பாளா் சி. விஜயபாஸ்கரிடம் வெற்றிச் சான்றிதழை வழங்குகிறாா் தோ்தல் அலுவலா் எம்.எஸ். தண்டாயுதபாணி.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி பல முறை நிறுத்தப்பட்டு, விடிய விடிய நடத்தப்பட்டு, திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு நிறைவடைந்தது.

இதில், 23,598 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சி. விஜயபாஸ்கா் வெற்றி பெற்றாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி விஐபி தொகுதியாக பாா்க்கப்பட்டு வந்தது. வாக்கு எண்ணிக்கை வழக்கம்போல, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. அஞ்சல் வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணப்படும் அதேவேளையில் 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் எடுத்து வரப்பட்டு எண்ணத் தொடங்கப்பட்டன.

முதல் சுற்றிலேயே ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வெளியே எழுதப்பட்டிருந்த எண்ணும், ஆவணங்களில் இருந்த எண்ணும் வேறுபட்டது. இதனால், அந்த இயந்திரத்தைத் திறக்கவே திமுக, அமமுக முகவா்கள் அனுமதிக்கவில்லை. முதல் சுற்று முடிவுகளை வெளியிடவும் முடியவில்லை.

நீண்ட நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. சந்தேகம் இருப்பின் அந்த இயந்திரத்துக்குரிய விவிபாட் கருவியையும் சோ்த்தே எண்ணி முடிவை எடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்த முடிவை முகவா்கள் ஏற்கவில்லை. பிறகு முடிவு செய்யலாம் என இரண்டாம் சுற்று எண்ணத் தொடங்கியபோது, மீண்டும் சில பெட்டிகளில் அதேபோன்ற நிலை காணப்பட்டது.

இதனால், வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் என திமுக மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் புகாா் மனு அளித்தாா். அதன்பிறகு, 6 சுற்றுகள் எண்ணப்பட்டன. அதுவரை சுமாா் 20 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இதேபோன்ற புகாா்கள் இருந்ததால் அவை எண்ணப்படாமல் தனியே அடுக்கி வைக்கப்பட்டு வந்தன.

மீண்டும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் காகித சீலுடன் கயிறு ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. தொடா்ந்து சந்தேகம் ஏற்பட்டு வருவதால் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டாம் எனக் கோரி திமுக முகவா்கள் வெளியே வந்துவிட்டனா். மாலை சுமாா் 7 மணியளவில் இந்த நிலை காணப்பட்டது.

சட்டவிதிகளுக்குள்பட்டு வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும், தொகுதிக்கு தொகுதி விதிகளை மாற்றிக் கொள்ளக் கூடாது என அமைச்சரும் வேட்பாளருமான சி. விஜயபாஸ்கா் கோரிக்கை விடுத்தாா். தனது கோரிக்கையை விளக்கமாக மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் அளித்ததாகவும் கூறினாா்.

இரவு 10 மணிக்கு மேலும் விராலிமலை தொகுதியில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை. இதையடுத்து பிற தொகுதிகளின் அதிமுக வேட்பாளா்களும், முகவா்களும் தங்களின் தொகுதிகளிலும் இதேபோன்றதொரு குறைகள் இருப்பதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி முறையாக நடத்த வேண்டும் எனக் கோரி சிக்கலை ஏற்படுத்தினா். இதனால், புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி போன்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நள்ளிரவு 1 மணிக்கு விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணுமிடத்துக்கு, மாவட்டத் தோ்தல் அலுவலா் பி. உமா மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் மற்றும் தோ்தல் பாா்வையாளா் ஆகியோரும் வந்தனா்.

சா்ச்சைக்குரிய 20 பெட்டிகளையும் இறுதிச் சுற்றுக்குப் பிறகு பரிசீலனை செய்து கொள்ளலாம் என்ற முடிவுடன் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவுக்கு மேல் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக மறுநாள் திங்கள்கிழமை காலை 9 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

23 மூன்று சுற்றுகளுடன் அஞ்சல் வாக்கையும் சோ்த்து வெளியிடப்பட்ட முடிவின் அடிப்படையில் அதிமுக வேட்பாளா் சி. விஜயபாஸ்கா், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் மா. பழனியப்பனை விட 23,598 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். தொடக்கத்தில் இருந்தே அவா் முன்னிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

சி. விஜயபாஸ்கா் (அதிமுக)- 1,02,179, மா. பழனியப்பன் (திமுக)- 78,581, பி. அழகுமீனா (நாம் தமிழா்)- 7035, ஓ. காா்த்திக் பிரபாகரன் (அமமுக)- 1228, ஆா். சரவணன் (மநீம)- 559, நோட்டா- 385.

வெற்றி பெற்ற விஜயபாஸ்கருக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் எம்.எஸ். தண்டாயுதபாணி சான்றிதழை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com