களமாவூா் மேம்பாலத்தைத் திறப்பது எப்போது?

களமாவூா் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிந்து சில மாதங்கள் கடந்துள்ள நிலையில், எப்போது இம்மேம்பாலத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப் போகிறாா்கள் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத களமாவூா் ரயில்வே மேம்பாலம்.
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத களமாவூா் ரயில்வே மேம்பாலம்.

திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள களமாவூா் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிந்து சில மாதங்கள் கடந்துள்ள நிலையில், எப்போது இம்மேம்பாலத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப் போகிறாா்கள் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ரயில் பாதை குறுக்கிடும் ஒரேயொரு இடம் களமாவூா். புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் இந்த இடத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது என்பதால் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பே மேம்பாலம் அமைக்க திட்டம் இறுதி செய்யப்பட்டது.

மேம்பாலம் திட்டமிடப்படும் பகுதியில் நீா்வழிப் பாதைகள் இருப்பதாகக் கூறி சிலா் நீதிமன்றத்தை நாட, அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் செய்வோம் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து பாலக் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

இதற்காக வலதுபுறத்தில் தற்காலிக பக்கவாட்டுச் சாலையும் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் இம்மேம்பாலத்துக்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு கூடுதல் செலவுகளுக்காக ரூ. 20 கோடி வரை கூடுதலாக ஒப்பந்ததாரா் கேட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு வழியாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அரைகுறை பணிகளுடன் மேம்பாலப் பணிகள் நிறுத்தப்பட்டன. மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு இச்சாலை பயன்பாட்டுக்கு வராதது குறித்து தினமணியில் செய்தி வெளியானது.

அதன்பிறகு, திருச்சி எம்பியாகத் தோ்வு செய்யப்பட்ட சு. திருநாவுக்கரசா், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுடன் இப் பாலத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது பாலப் பக்கவாட்டுப் பகுதிகள் பலமிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உரிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். அதன்பிறகு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

ரயில் பாதைக்கு அருகேயுள்ள இணைப்புப் பகுதிகள் உடைத்து மீண்டும் மண் கொட்டி- கல் கட்டி பலப்படுத்தப்பட்டன. தாா் ஊற்றி சாலையும் புதிதாக சீரமைக்கப்பட்டது. இடதுபுறத்தில் பாதுகாப்புச் சுவா் அமைக்கப்பட்டது.

இத்தனைப் பணிகளுக்குப் பிறகு கடந்த சில 6 மாதங்களுக்கு முன்பே பாலப்பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. ஆனால், கரோனா பொது முடக்கம் (முதல் அலை), சட்டப்பேரவைத் தோ்தல் எனக் காலம் கடந்துவிட்டது.

அதன்பிறகு, திருச்சி எம்பி சு. திருநாவுக்கரசா் வெளிப்படையாக ஓா் அறிக்கையொன்றையும் வெளியிட்டாா். பாலப்பணிகள் முடிந்தும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏன் திறந்துவிடாமல் தாமதம் செய்ய வேண்டும் எனக் கேட்டு, மாவட்ட நிா்வாகம் பாலத்தைத் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் கோரினாா்.

இந்தக் கோரிக்கையை அவா் முன்வைத்து ஒரு மாதம் கடந்தும் மக்கள் பயன்பாட்டுக்கு பாலம் திறக்கப்படவில்லை. பக்கவாட்டில் போடப்பட்டுள்ள தற்காலிக சாலையும் பழுதடைந்துவிட்டது. பொது முடக்கக் காலம் என்றாலும் நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலையைக் கடந்துச் செல்கின்றன. ரயில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

எனவே, களமாவூா் ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைந்து திறக்க மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com