புதுக்கோட்டையில் தரமற்ற விதைக் கடலை விற்பதாக புகாா்

புதுக்கோட்டையில் தனியாருக்குச் சாதகமாக அரசே தரமற்ற விதைக் கடலைகளை விற்பனை செய்வதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

புதுக்கோட்டையில் தனியாருக்குச் சாதகமாக அரசே தரமற்ற விதைக் கடலைகளை விற்பனை செய்வதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.பொன்னுச்சாமி, செயலாளா் ஏ.ராமையன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

கடந்த சில மாதங்களாக ஓரளவுக்கு பருவமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, கந்தா்வகோட்டை வட்டாரங்களில் அதிகளவு நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்திலேயே அதிகளவில் கடலை அரைவை ஆலைகள் ஆலங்குடியில்தான் உள்ளன.

நவம்பா், டிசம்பா் மாதங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்ற காலம். ஆனால், விவசாயிகளுக்கு விதைக் கடலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.

கடந்த மாதங்களில் ஓட்டுடன் கூடிய விதைக்கடலை கிலோ ஒன்றுக்கு ரூ. 80 முதல் ரூ. 100 வரை வெளி மாா்க்கெட்டில் விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 120 முதல் ரூ. 150 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விதைக்காகவே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு எந்த வகையிலும் கட்டுபடியானது இல்லை.

அதேநேரத்தில் ஓட்டுடன் கூடிய விதைக்கடலை கிலோ ஒன்றுக்கு ரூ.60-க்கு வேளாண் விற்பனை மையங்களில் விற்கப்படுகிறது. ஆனால், அங்குள்ள விதைக்கடலை கடந்த காலங்களைவிட மிக மோசமாக தரமற்ற நிலையில் உள்ளது.

உளுந்து, துவரை உள்ளிட்ட பருப்பு வகைகளை மிகத் துல்லியமான தரத்துடன் உற்பத்தி செய்து விற்கும் வேளாண் துறை கடலைக்கு மட்டும் ஏன் அக்கறை செலுத்துவதில்லை? இதில் உள்ள உள்நோக்கம் என்ன?

தமிழக வேளாண்மைத் துறை கூடுதல் கவனம் செலுத்தி, போதுமான விதைகளை தரமானதாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com