பழங்கால மனிதர்களின் பழக்கங்களை அறிய தொல்லியல் ஆய்வுகள்: அமைச்சர் எஸ். ரகுபதி 

பழங்கால மனிதர்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதற்காகத்தான் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
பழங்கால மனிதர்களின் பழக்கங்களை அறிய தொல்லியல் ஆய்வுகள்: அமைச்சர் எஸ். ரகுபதி 

புதுக்கோட்டை: பழங்கால மனிதர்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதற்காகத்தான் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை தொடங்கிய தமிழக தொல்லியல் கழகத்தின் மாநில மாநாட்டை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது:

உலகம் முழுவதும் மானுடப் பரவல் இருந்திருப்பது குறித்தும், முன்னோர்களின் கடந்த கால வாழ்க்கை முறையை ஆய்வு செய்வதற்காகவும், பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான தொன்மைச் சான்றுகளையும், கல்வெட்டுகளையும் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு.

தமிழகத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான பெருங்கற்கால சின்னங்களையும், கல்வெட்டுச் சான்றுகளையும், இன்ன பிற தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் கொண்டிருக்கும் மாவட்டம் புதுக்கோட்டை.

புதுக்கோட்டை திருமயத்துக்குள்பட்ட குருவிக்கொண்டான்பட்டி குடகு மலையில், மிகப் பழமையான கற்கால கல்லாயுதம், திருமயம் கோட்டையில் உருட்டுப்பாறையில் வரையப்பட்டிருக்கும் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களும், பெருமாள் மற்றும் சிவபெருமானுக்கு தனித்தனி குடைவரைக் கோயில்கள் அமைந்திருப்பது சிறப்பானதாகும்.

இரும்புக்காலத்தின் தொடக்கம் முதலாக செங்கீரை இரும்பு என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்திருக்கிறது. செங்கீரை பகுதிகளில் இரும்பு உருக்கும் தொழிற்சாலைகள் இருந்திருக்கின்றன.

குடுமியான்மலை, சித்தன்னவாசல் ஆகிய ஊர்களில் மிகப் பழமையான சமணர் படுக்கைகளும், அதன் அருகிலேயே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் கல்வெட்டுகளும் காணப்படுவது நமது பழந்தமிழ் மொழி அறிவை வெளிப்படுத்தும் முதன்மைச் சான்றாகும்.

மனித வளத்தை பொது காரியங்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்துவதில் சிறந்தவர்களாக தொண்டைமான் மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். எனவேதான் மிக மோசமான பஞ்சம் ஏற்பட்ட 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், ஏராளமான நலத்திட்டங்களை சமஸ்தான பகுதிகளில் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் மிக முக்கியமான இசைக் கல்வெட்டு இருக்கும் இடமாக குடுமியான்மலை விளங்குகிறது. அதோடு மட்டுமின்றி அதற்கு முன்னோடியாக மலையக்கோயில், குடுமியான்மலை ஆகிய இடங்களில் தலா ஒரு கல்வெட்டிலும், திருமயத்தில் இரண்டு கல்வெட்டுகளிலும் பரிவாதினி என்ற வீணையின் பெயர், குடைவரைகளின் முன் பகுதியில் எழுதி இருப்பது தனிச் சிறப்பாகும்.

சில ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டையில் மிகப் பழமையான நெடுங்கற்கள் ராங்கியம் அருகேயுள்ள கண்ணனூரிலும், பூலாங்குறிச்சி மலை அடிவாரத்தில் உள்ள மலையடிப்பட்டி கிராமத்திலும் காணப்படுகின்றன.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வரும் கல்வட்டங்களையும் கல் படுக்கைகளை உள்ளூர் மக்கள் வழிபட்டு வருகின்றனர். கோயில்கள் உருவாவதற்கு முன்னதாக கொம்படி ஆலயங்களும், கல் வைத்து வழிபடும் பழக்கமும் தமிழகத்தில் பரவலாக இருந்துள்ளது,

இம்முறை மூத்தோர் வழிபாட்டின் எச்சம் என்பதை பண்பாட்டுச் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன. பின்னாளில் இவற்றில் புதிய வகையிலான கட்டுமானங்களை உருவாகியிருக்கின்றன.

பழங்கால மனித வாழ்வின் பழக்க வழக்கங்கள் எவ்வாறு அமைந்திருந்தன என்பனவற்றை அறிந்து கொள்ளத் தான் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழக முதல்வர் இந்த ஆய்வுகளுக்கு முழு ஆதரவு தந்து தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் உலக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்றார் ரகுபதி.

'30ஆவது ஆவணம்' ஆய்விதழையும், மாநாட்டு மலரையும் அமைச்சர் எஸ். ரகுபதி வெளியிட சட்டப்பேரவை உறுப்பினர் வை.முத்துராஜா பெற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வாழ்த்திப் பேசினார்.

தொல்லியல் கழகத்தின் நிறுவனர் எ. சுப்பராயலு, தலைவர் செந்தீ நடராசன் ஆகியோர் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் சர்வதேச கருத்தரங்குகள் குறித்தும், ஆவணம் ஆய்விதழ் குறித்தும் விளக்கவுரை நிகழ்த்தினர்.

இவ்விழாவில், முன்னாள் எம்எல்ஏ இராசு. கவிதைப்பித்தன், முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா, ஆர். தொண்டைமான், கீரைத் தமிழ்ச்செல்வன், கல்வி நிறுவனங்களின் தலைவர் கீரை தமிழ் ராஜா, வெங்கடேஸ்வரா பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, மாநாட்டு நிதிக் குழுத் தலைவர் ஜி.எஸ். தனபதி, வரவேற்புக் குழுத் தலைவர் டாக்டர் ச.ராம்தாஸ், வாசகர் பேரவையின் செயலர் சா. விஸ்வநாதன், முன்னாள் உதவி இயக்குநர் ஜெ.ராஜாமுகமது உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முன்னதாக தொல்லியல் கழகத்தின் செயலர் சு. ராசவேலு வரவேற்றார். முடிவில், உள்ளூர் செயலர் ஆ. மணிகண்டன் நன்றி கூறினார். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. தொல்லியல் மற்றும் நாணயவியல் கண்காட்சியும், பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com