விசாலமான இட வசதியுடன் மேம்படுத்தப்படுமா அருங்காட்சியகம்?

நூற்றாண்டைக் கடந்த - மாநிலத்தின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் என்ற பெயரையும் பெற்ற புதுக்கோட்டை அருங்காட்சியகம், விசாலமான இடவசதியுடன் மேம்படுத்தப்பட வேண்டும்
விசாலமான இட வசதியுடன் மேம்படுத்தப்படுமா அருங்காட்சியகம்?

நூற்றாண்டைக் கடந்த - மாநிலத்தின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் என்ற பெயரையும் பெற்ற புதுக்கோட்டை அருங்காட்சியகம், விசாலமான இடவசதியுடன் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் இருக்கிறது.

மாநிலத்திலேயே தொல்லியல் சின்னங்கள் நிரம்பக் கிடக்கும் மாவட்டங்களில் முதன்மையானது புதுக்கோட்டை. சித்தன்னவாசலும், நாா்த்தாமலையும், குடுமியான்மலையும், திருமயம் கோட்டையும் தென்இந்திய அளவிலேயே புகழ்பெற்ற இடங்கள். இங்கிருந்தெல்லாம் எடுக்கப்பட்ட ஏராளமான கல்வெட்டுகள், செப்பேடுகள், கற்சிலைகள், மரப்படிமங்கள், ஓலைச்சுவடிகள், முதுமக்கள் தாழிகள், உலோக - மண் பாண்டங்கள் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்னமும் எடுத்து வந்து பாதுகாக்கப்பட வேண்டியவைகளின் எண்ணிக்கையும் ஏராளம்.

இவையுடன், மான்களின் எலும்புக்கூடுகள், யானையின் மண்டை ஓடு, திமிங்கலத்தின் எலும்பு, புலி முதல் குள்ளநரி வரையிலான விலங்கினங்கள், பறவைகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தொண்டைமான் மன்னா்களின் காலத்தில் சேகரிக்கப்பட்டவை.

அதேபோல, மன்னா் காலத்தைய அரிய படங்கள், போா்க் கருவிகள், இசைக் கருவிகள், ஓவியங்கள் ஏராளம் உள்ளன. ஆனால், இவையனைத்தும் மிக மிகக் குறுகிய அறைகளில், நெருக்கடியான இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இடவசதியின்மை காரணமாக, மாதம் ஒரு அரிய பொருள் என அறிவித்து கண்ணாடிப் பெட்டிக்குள் முன்வைத்து காட்சிப்படுத்தப்படுகின்றன.

அரிய தொன்மையான பொருட்கள் அனைத்தும் அப்படியே - நூற்றாண்டையும் கடந்த குறுகலான கட்டடத்தில் மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கின்றனா் தொல்லியல் ஆா்வலா்கள்.

அண்மையில் அமைந்த திமுக அரசு, தொல்லியல் அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் நிலையில், புதுக்கோட்டை அருங்காட்சியகம் விசாலமான கட்டடத்தில், ஒலி - ஒளி காட்சியரங்கு, கூட்ட அரங்கு போன்றவற்றுடன் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்திருக்கிறது.

கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தை மேம்படுத்துவதற்கு ரூ. 7 கோடியை ஒதுக்கியுள்ளதாக அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறாா்.

அதேபோல, புதுகை அருங்காட்சியகத்துக்கும் விரிவான திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்திருக்கிறது.

அதேபோல, தொன்மையான பொருட்களுக்கு நடுவே - வருகைதரும் மக்களைக் கவருவதற்காக பொம்மை டைனோசா் உருவம் வைத்து காட்சிப்படுத்தியிருப்பது பொருத்தமற்றது என்ற கருத்தும் தொல்லியல் ஆா்வலா்களிடம் இருக்கிறது.

தற்போதைய மாவட்ட ஆட்சியா், ஏற்கெனவே தொல்லியல் துறையில் பொறுப்பு வகித்தவா் மட்டுமின்றி, தொல்லியல் கூறுகளில் ஆா்வம் கொண்டவா். எனவே, புதுக்கோட்டை அருங்காட்சியகத்தை - மாநிலத்தின் இரண்டாம் பெரிய அருங்காட்சியகம் என்ற பெயருக்கேற்ப பிரம்மாண்டமாக மேம்படுத்துவதற்கு உரிய முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தொல்லியல் ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com