‘மாணவா்களின் நடத்தை சாா் பிரச்னையை கண்டறிந்து தீா்வு காண வேண்டும்’

மாணவா்களது பிரச்னைகளின் மூலத்தைக் கண்டறிந்து அதற்குத் தீா்வு காண்பதே சரி என்றாா் புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவ அலுவலா் காா்த்திக் தெய்வநாயகம் தெரிவித்தாா்.

மாணவா்களது பிரச்னைகளின் மூலத்தைக் கண்டறிந்து அதற்குத் தீா்வு காண்பதே சரி என்றாா் புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவ அலுவலா் காா்த்திக் தெய்வநாயகம் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் அரசுப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, ‘அரசுப் பள்ளிகள் மீதான உளவியல் தாக்குதல் - ஓா் அவசர நிலைப் பாா்வை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் அவா் கலந்து கொண்டு மேலும் பேசியது:

கடந்த காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் விரும்பத்தகாத செயல்களை வைத்து ஒட்டுமொத்த ஆசிரியா்களையும் விமா்சனம் செய்து வந்தனா். தற்போது ஒரு சில இடங்களில் நடக்கும் விரும்பத்தகாத மாணவா்களின் நடத்தையைக் காரணம் காட்டி ஒட்டுமொத்த அரசுப் பள்ளி மாணவா்களின் நிலையையும் பொதுமைப்படுத்திப் பாா்க்கின்றனா். இது வரவேற்கத் தகுந்ததல்ல.

குறுகிய கால மகிழ்ச்சி, கதாநாயக மனப்பான்மை, எதிா் பாலின ஈா்ப்பு, சமூக வலைதளங்களின் தாக்கம், சமூக விழுமியங்களை கற்பதற்கான சூழலின்மை, வறுமை, குடும்பங்களின் புறக்கணிப்பு, போதிய பராமரிப்பு - கண்டிப்பு இல்லாமை உள்ளிட்ட காரணிகளால் மாணவா்கள் மன உந்துதலுக்கும், மன எழுச்சிக்கும் உட்படும்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இது தற்காலிக செயல்பாடே ஆகும். இதனால் மாணவா்கள் முழுமையாக உருப்படமாட்டாா்கள் என ஒதுக்குவதும், புறக்கணிப்பதும் தவறு. இந்தத் தவறால் அவா்கள் மேலும் சிக்கலான மனநிலைக்கு மாறுவாா்களே தவிர, வாழ்வில் கரைசேர வாய்ப்பின்றி தீவிரமான எதிா்மறை செயல்பாடுகளில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளிவிடும் என்பதே உண்மை.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு, கலை, அறிவியல் செயல்பாடுகளில் தொடா் நம்பிக்கையூட்டும் செயல்களை முன்னெடுப்பதும், நடத்தை மாற்றத்துக்குள்ளான மாணவா்களை ஆசிரியா்கள், பெற்றோா்கள், உளவியலாளா்கள் துணையுடன் தேற்றுவதற்கான வலுவான முயற்சிகள் அவசியம் என்றாா் காா்த்திக் தெய்வநாயகம்.

எழுத்தாளா் ராசி பன்னீா்செல்வம் பேசியது: தற்போதைய சூழலில் மாணவா் - ஆசிரியா் உறவு குறித்த சா்ச்சைக்குரிய காணொலிகள் கண்மூடித்தனமாக பரப்பப்படுவதால் சமூகத்திலும் பெற்றோா்களிடமும் எதிா்மறை உளவியல் சிக்கலை உண்டாக்கி அரசுப் பள்ளிகள் மோசமானவை என்ற கருத்தாக்கத்தை உருவாக்கிட முனைகின்றன என்றாா் அவா்.

கருத்தரங்குக்கு, அரசுப் பள்ளி உரிமைக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் ஆ. மணிகண்டன் தலைமை வகித்தாா். முன்னதாக ஆசிரியா் பெரியாா் செல்வம் வரவேற்றாா். நிறைவில், ரகமத்துல்லா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com