குப்பைக் கிடங்கை இடம் மாற்ற கோரி சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே குப்பைக் கிடங்கை இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
குப்பைக் கிடங்கை இடம் மாற்ற கோரி சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே குப்பைக் கிடங்கை இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இலுப்பூா் அருகே புங்கினிப்பட்டி சாலையில் உள்ளது சத்தியநாதபுரம். இங்கு பல ஆண்டுகளாக உள்ள குப்பைக் கிடங்கில்தான் இலுப்பூா் பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளில் சேரும் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு கம்போஸ்ட் (உரம்) தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக இந்தக் குப்பை கிடங்கில் இருந்து துா்நாற்றம் வீசி வருவதாகவும் இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதார சீா்கேடு ஏற்படுவதோடு மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாக குற்றம் சாட்டுகின்றனா். மேலும் இந்தக் குப்பை கிடங்கு அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் குழந்தைகளை சோ்த்தால், அவா்களுக்கு உடல் நல கோளாறு, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக பெற்றோா் பிள்ளைகளை சோ்க்க மறுக்கின்றனா்.

எனவே, குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, சத்தியநாதபுரம் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த இலுப்பூா் பேரூராட்சித் தலைவா் சகுந்தலா வைரவன், வட்டாட்சியா் ரமேஷ், செயல் அலுவலா் ஆஷாராணி உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். மறியலால் இப்பகுதியில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com