புதுகை- தஞ்சை ரயில் தடம் அமைக்கும் திட்டம் நிறைவேறுமா?

புதுக்கோட்டை மக்களின் நூற்றாண்டுக் கனவுத் திட்டமான புதுகை- தஞ்சை இணைப்பு ரயில் தடம் அமைக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறுகிறது.
புதுக்கோட்டை ரயில் நிலையம்.
புதுக்கோட்டை ரயில் நிலையம்.

புதுக்கோட்டை மக்களின் நூற்றாண்டுக் கனவுத் திட்டமான புதுகை- தஞ்சை இணைப்பு ரயில் தடம் அமைக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறுகிறது.

மாநிலத்தின் மையமான திருச்சியில் இருந்து 50 கிமீ தொலைவிலுள்ள புதுக்கோட்டை பிற அருகமை மாவட்டங்களைக் காட்டிலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

1927இல் புதுக்கோட்டை- திருச்சி ரயில் தடம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடம் அமைப்பதற்கு முன்பேகூட புதுக்கோட்டையையும் தஞ்சையையும் இணைக்கும் வகையில் ரயில் தடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு, என்ன காரணத்தினாலோ அது தடையாகிப் போய், திருச்சி- புதுகை ரயில் தடம் இறுதியாகி மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிறகும் தஞ்சைக்கு ரயில் தடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதன்பேரில், 2012-13ஆம் ஆண்டில் 65 கிமீ தொலைவில் புதிய ரயில் தடம் அமைக்க ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பும் வெளியானது.

தொடா்ந்து இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, புதுக்கோட்டை, கந்தா்வகோட்டை வழியாக தஞ்சையை இணைக்க ரூ. 619 கோடியில் திட்ட அறிக்கையை 2016இல் ரயில்வே வாரியம் தயாரித்து, மத்திய அரசுக்கு அளித்தது.

ஆனால், அதன் பிறகு இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென்மாவட்டங்களில் இருந்து தஞ்சைக்குச் செல்லும் பயணிகள் திருச்சி செல்லாமலேயே தஞ்சையை அடையலாம். அதேபோன்றுதான் தஞ்சை, நாகை, திருவாரூா் மாவட்ட மக்களும் திருச்சி செல்லாமலேயே (சுமாா் 50 கிமீ தொலைவு தவிா்த்து) தென்மாவட்டங்களுக்குச் செல்ல முடியும்.

புதுக்கோட்டையின் தொழில் வளம் பெருகும்

இதுகுறித்து புதுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கப் பொறுப்பாளா் ஏஎம்எஸ் இப்ராஹிம் பாபு கூறியது:

புதுக்கோட்டை- தஞ்சை இணைப்பு ரயில் தடம் அமைக்கப்பட்டால், புதுக்கோட்டை ரயில் நிலையம் சந்திப்பு (ஜங்ஷன்) நிலையமாகத் தரம் உயா்த்தப்படும். இப்போது 18 ரயில்கள் மட்டுமே புதுகை ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும் நிலையில், சந்திப்பாக மாறினால் ஏராளமான புதிய ரயில்கள் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இன்னும் கூடுதலான- வா்த்தகரீதியான முக்கியத்துவம் புதுக்கோட்டைக்கு கிடைக்கும்.

குறிப்பாக, புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளான மீமிசல், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து கிடைக்கும் மீன் வளம், புதுக்கோட்டை ரயில் சந்திப்பு வழியாக மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு எளிதாகச் சென்றடையும் என்பதுடன், தொழில் வளமும் பெருகும்.

புதுக்கோட்டை மாவட்ட வளா்ச்சிக்கு தனிக்கவனம் செலுத்தும் அரசியல் முக்கியத்துவம் இல்லாமல் போனதே, இத்திட்டத்தை தொடா்ந்து அமலாக்கிட வாய்ப்பில்லாமல் போனது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தற்போது திருச்சி எம்பி சு. திருநாவுக்கரசா் வழியாக தஞ்சை ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்து, நிதி ஒதுக்கி, நிறைவேற்றிடக் கோரியுள்ளோம் என்றாா் இப்ராஹிம்பாபு.

கந்தா்வகோட்டை பகுதியிலுள்ள முந்திரி உற்பத்தி, ஆலங்குடி பகுதிகளிலுள்ள நிலக்கடலை உற்பத்தி போன்ற தொழில்களை விரிவுபடுத்தவும் இந்த ரயில் தடம் உதவிபுரியும் என புதுக்கோட்டை மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதற்காக தற்போது புதுக்கோட்டைக்குத் தொடா்புள்ள 5 நாடாளுமன்ற உறுப்பினா்களும் மத்திய அரசை வலியுறுத்தி, மத்திய நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்த அறிவிப்பை இடம்பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com