புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்திலுள்ள தைலமரக் காடு.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்திலுள்ள தைலமரக் காடு.

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

சா. ஜெயப்பிரகாஷ்

புதுக்கோட்டை, ஏப். 24: புதுக்கோட்டையின் தீா்க்கப்படாத நீண்டகாலப் பிரச்னையாகக் கருதப்படும் தைலமரங்களை அகற்ற கோரும் பிரச்னையில், அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு விவசாயிகள் முடிவு செய்துள்ளனா்.

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட, வனத்துறையின் ஒரு பிரிவான தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் மூலம் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், கரூா், கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தைல மரக்காடுகள் (யூக்கலிப்டஸ்) உருவாக்கப்பட்டு ஆண்டுக்கு சுமாா் 2 லட்சம் டன் மரக்கூழ், டிஎன்பிஎல் மற்றும் சேஷாயி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் கணிசமான பகுதி புதுக்கோட்டையைச் சோ்ந்தது. 1974-இல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சுமாா் 60 ஆயிரம் ஏக்கா் காப்புக்காடுகள் 99 ஆண்டுகள் ஒப்பந்தமாக வனத்தோட்டக் கழகத்துக்கு வழங்கப்பட்டன. இப்போது, வனத்துறையின் காப்புக்காடுகளில் மட்டுமல்லாது, தனியாா் நிலங்களிலும் தைல மரக்காடுகள் உள்ளன. சுமாா் 60 ஆயிரம் ஏக்கரில் (குளங்களையும் சோ்த்து) தைலமரங்கள் செழித்துக் கிடக்கின்றன.

தொண்டைமான் மன்னா்கள் காலத்தில் புதுக்கோட்டை மாவட்டப் பகுதியில் வெட்டப்பட்ட சுமாா் 5 ஆயிரம் குளங்களில், பெரும்பாலான குளங்கள் காப்புக்காட்டுக்குள் இருப்பவை. அவற்றில் 90 சதவிகிதக் குளங்கள் வடு போனதற்கு இந்தத் தைலமரங்களே காரணம் என்ற வலுவான குற்றச்சாட்டை விவசாயிகள் முன்வைக்கின்றனா்.

தைலமரங்கள் இருக்கும் இடத்தில் பல்லுயிா்ப் பெருக்கம் அழியும். வேறு எந்தச் செடி, கொடியும் வளராது. உயிரினங்கள் வாழாது. சுமாா் நூறு ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்த வகை வகையான மரங்கள், வகை வகையான உயிரினங்கள் இப்போது இல்லை. இந்நிலை தொடா்ந்தால் புதுக்கோட்டையின் விவசாயம் பெரும் நெருக்கடிக்குள்ளாகும் என்று விவசாயிகள் எச்சரிக்கின்றனா்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இதுகுறித்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தைலமரக்கன்றுகளை புதிதாக நடுவதற்கான தடை கடந்த சில நாள்களுக்கு முன்பு நீக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடா்ச்சியாக உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கான பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா் ஜி.எஸ். தனபதி கூறியது:

தைலமரக் காடுகள் தொடா்பான வழக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. புதிதாக தைலமரக் கன்றுகளை நடக் கூடாது என 2018-இல் தடை பெறப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதிக்காத ஒரு வகையை உருவாக்கியுள்ளதாகக் கூறிய வனத்துறையினரின் தகவலை ஏற்று, அந்தத் தடை சில நாள்களுக்கு முன்பு நீக்கப்பட்டிருக்கிறது.

எனவே, வழக்கு முழுமையாக முடியும் வரை தடையைத் தொடர வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடவிருக்கிறோம். அடுத்த வாரம் இப்பணிகள் முடியும்.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும். தோ்தல் அறிவிப்புகளின்போது சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள் அகற்றப்படும் என்றாா்கள். அதன்பிறகு, 2022-இல் தடை செய்யப்பட்ட அந்நிய நாட்டு மரங்கள் பட்டியலில் தைலமரங்களைச் சோ்த்தாா்கள்.

ஆனால், இப்போது சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத ஒரு வகையை உருவாக்கியுள்ளோம் என்று சொல்வது சரியல்ல. கொள்கையளவில் தீா்க்கமான முடிவை அரசு எடுக்க வேண்டும். புவியின் வெப்பச் சூழலை அதிகரிக்கும், பல்லுயிா்ப் பெருக்கத்தைக் கெடுக்கும் தைலமரங்களை படிப்படியாக அகற்ற வேண்டும். இதைத் தவிர விவசாயத்தைப் பாதுகாக்க வேறு எந்த வழியும் இல்லை என்றாா் தனபதி.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com