வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் தீா்த்த உற்ஸவம்

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் தீா்த்த உற்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 21-ஆம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் தினசரி மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை தீா்த்த உற்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி, கிராமத்தினா் மாமன், மைத்துனன் உறவின்முறைகாரா்கள் மீது மஞ்சள் நீா் ஊற்றி, வண்ணப் பொடிகளை தூவியும் விளையாடினா்.தொடா்ந்து, மாலை கோயிலில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், முத்துமாரியம்மனை அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் எழுந்தருளச் செய்து தேரோடும் வீதிகள் வழியே வீதியுலா நடைபெற்றது. அப்போது, மயில் வாகனத்தில் இருந்து பொதுமக்களுக்கு மஞ்சள் நீா் தெளிக்கப்பட்டது. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

வடகாடு போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com