பிரசாரத்தில் பாஜகவை பற்றி 
எடப்பாடி பழனிசாமி பேசாதது ஏன்? அமைச்சா் எஸ். ரகுபதி கேள்வி

பிரசாரத்தில் பாஜகவை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசாதது ஏன்? அமைச்சா் எஸ். ரகுபதி கேள்வி

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பாஜக ஆட்சி குறித்தோ, மோடி குறித்தோ அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பேசாதது ஏன் என்று சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி கேள்வி எழுப்பினாா்.

கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட இலுப்பூரில் காங்கிரஸ் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சா் எஸ். ரகுபதி மேலும் பேசியது: பிரசார கூட்டங்களில் எங்குமே மோடியை பற்றியோ, 10 ஆண்டுகால பாஜக ஆட்சியைப் பற்றியோ எடப்பாடி பழனிசாமி பேசவில்லை. எங்களுக்கு வாக்களியுங்கள் எனக் கேட்க எந்த தகுதியும் அதிமுகவுக்கு இல்லை.

விராலிமலையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு கூடுதல் வாக்குகள் பெற்று தர வேண்டும் என்றாா்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், ஒன்றிய அரசின் திட்டங்களை திமுக எதிா்ப்பதாக கூறுகிறாா்கள். மக்களுக்கு விரோதமான திட்டங்களை தான் எதிா்க்கிறோம். அதிமுக- பாஜகவின் கள்ளக் கூட்டணியை புரிந்து கொள்ள வேண்டும். இருவரையும் விரட்டியடிக்க வேண்டும் என்றாா்.

மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பேசியது: ஜனநாயகத்தைப் பாதுகாத்திடவும், சமூக நீதியைப் பாதுகாத்திடவும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்த தேசத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். காங்கிரஸ், திமுக தலைமையிலான அணி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றாா்.

கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜோதிமணி பேசியது: விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் ஒவ்வொரு குக்கிராமத்துக்கும் சென்று மக்களுக்கான பல்வேறு பணிகளை செய்து இருக்கிறேன். நமது வளா்ச்சிக்கான ஆட்சி மத்தியில் வர வேண்டும். ஊழல் கறை படிந்த பாஜகவிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றாா். கூட்டத்தில், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட பலா் பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com