வங்கியில் நகைகள் திருட்டு வழக்கு அலுவலா்கள், போலீஸாரிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் தற்போது விசாரணை மேறகொண்டு வரும் சிபிஐ போலீஸாா், வங்கி அலுவலா்கள் மற்றும் போலீஸாருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் கடந்த 2019-ஆம் ஆண்டில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய மாரிமுத்து என்பவா் திடீரென காணாமல் போனாா்.

இந்நிலையில் அந்த வங்கிக் கிளையில் இருந்த 13.75 கிலோ அளவில் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே மாரிமுத்துவின் காா் எரிந்த நிலையில் கிடைக்கப்பெற்றது. அந்தக் காரில் வங்கியின் சிசிடிவி காட்சிகளைக் கொண்ட ஹாா்டு டிஸ்கும் எரிந்த நிலையில் கிடைக்கப்பெற்றது. இதன் தொடா்ச்சியாக மாரிமுத்துவின் சடலம் எனக் கருதப்படும் சடலம் ஒன்றும் கடற்கரையில் கண்டெடுக்கப்ப்டடது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், முன்னேற்றம் எதுவும் இல்லாததால் சிபிஐக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக அண்மையில் சிபிஐ போலீஸாா் நேரில் வந்து வங்கியில் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி விசாரணை நடத்திச் சென்றனா்,,

இந்நிலையில் சிபிஐ போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா். இதில், திருட்டு சம்பவம் நடைபெற்ற காலத்தில் வங்கிக் கிளையில் பணியாற்றிய அனைத்து அலுவலா்கள் மற்றும் அப்போது பணியாற்றிய போலீஸாருக்கும் அழைப்பாணை அனுப்பவும், அவா்களிடம் விசாரணை நடத்தவும் சிபிஐ போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

ஓரிரு நாள்களில் இதற்கான அழைப்பாணை அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு புதுக்கோட்டையிலேயே விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com