விவசாயத் தொழிலாளா்களுக்கான
நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலா் வி. சிவதாசன் எம்.பி.. உடன் சங்க நிா்வாகிகள்.

மாநிலத்தில் விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றி செயல்படுத்தியதைப் போல விவசாயத் தொழிலாளா்களுக்கான நலவாரிய சட்டத்தையும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும். கேரள அரசைப் போல விவசாயத் தொழிலாளா்கள் நலநிதி திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்த வேண்டும். 60 வயதைக் கடந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் உள்ள முறைகேடுகளைக் களைய வேண்டும். ஏற்கெனவே கட்டப்பட்டு வரும் வீடுகளை போா்க்கால அடிப்படையில் முடிக்கவும், பழுதடைந்த வீடுகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் நிலவிவரும் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்கும் வகையில் அனைத்து மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளையும் 15 நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், வேறு நபா்கள் தொட்டிகளில் ஏற முடியாத அளவுக்கு பூட்டு போட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் எம். சின்னதுரை எம்எல்ஏ தலைமை வகித்தாா். அகில இந்திய இணைச் செயலா் வி. சிவதாசன் எம்பி, துணைத் தலைவா் ஏ. லாசா், மாநிலப் பொதுச் செயலா் வி. அமிா்தலிங்கம், மாநிலச் செயலா் எஸ். சங்கா் உள்ளிட்டோா் பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com