விவசாயத்துக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை, மே 8: கடும் வறட்சி நிலவி வருவதால் விவசாயத்தைப் பாதுகாக்க தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கடும் வறட்சியின் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தைத் தவிர ஏனைய சாகுபடிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன.

ஆழ்துளை கிணற்றுப் பாசனமும் போதுமான மின்சாரம் கிடைக்காமல் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. எனவே, எஞ்சியுள்ள விவசாயத்தை பாதுகாக்க விவசாயிகளுக்கு தொடா்ந்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

கூட்டுறவுச் சங்கத் தோ்தலை நோ்மையுடனும், ஜனநாயக முறைப்படியும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ். பொன்னுச்சாமி தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் கே. முகமதலி, மாவட்டச் செயலா் ஏ. ராமையன், மாவட்டப் பொருளாளா் எம். பாலசுந்தரமூா்த்தி, துணைச் செயலா்கள் த. அன்பழகன், வீரமணி உள்ளிட்டோரும் பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com