தஞ்சாவூர் அருகே புத்தர் சிலை கண்டெடுப்பு
By தஞ்சாவூர் | Published On : 31st January 2015 01:54 AM | Last Updated : 31st January 2015 01:54 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் அருகே தலையில்லாத புத்தர் சிலை அண்மையில் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளரும், பெüத்த ஆய்வாளருமான பா. ஜம்புலிங்கம், சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி. மாறன் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் உள்ள அய்யம்பேட்டையிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள மணலூரில் அமர்ந்த நிலையில் புத்தர் சிலை இருப்பதாக தெரிய வந்தது.
சிலையின் தலைப்பகுதி காணப்படவில்லை. வலது கை உடைந்த நிலையில் உள்ளது.
தலைப் பகுதியின்றி சிலையின் உயரம் 80 செ.மீ. பரந்த மார்பைக் கொண்ட இந்தப் புத்தர் சிலையில் மேலாடை
மார்பின் இடதுப்புறம் தொடங்கி இடதுகை வரை காணப்படுகிறது. சோழ நாட்டில் காணப்படுகிற பிற புத்தர் சிலைகளைப் போன்ற அமைப்பில் உள்ள இந்த புத்தர் சிலை உள்ளது.
அய்யம்பேட்டை செல்வராஜ் என்பவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அய்யம்பேட்டைக்குத் தெற்கே 3 கிமீ தொலைவில் வையச்சேரி கிராமத்தின் குளக்கரையில் புத்தர் சிலையின் தலைப்பகுதி இருப்பதாகக் கூறி
அதன் புகைப்படத்தை அனுப்பினார்.
வையச்சேரிக்கும் மணலூருக்கும் இடையேயுள்ள தொலைவு 6 கி.மீ. இந்நிலையில் தற்போது மணலூரில் காணப்படும் தலையில்லாத புத்தர் சிலை வையச்சேரியில் காணப்பட்ட தலையோடு பொருந்தலாம் எனக் கருத முடிகிறது.
அய்யம்பேட்டையைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் இதுபோல காணப்படுகிற புத்தர் சிலைகள் இப்பகுதியில் புத்தர் கோயில் இருந்ததற்கான சான்றுகளாக அமைகின்றன.