ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் பாதையில் பாஜக அரசு: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு

ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் பாதையிலேயே மோடி தலைமையிலான பாஜக அரசும் செல்கிறது என்றார் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன்.

ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் பாதையிலேயே மோடி தலைமையிலான பாஜக அரசும் செல்கிறது என்றார் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன்.
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தமிழீழப் போரில் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 8ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் அவர் பேசியது:
உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஈழத்தில் நம் சகோதரர்கள் ஏறத்தாழ 2 லட்சம் பேர் (குழந்தைகள் உள்பட) படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் பேரழிவை 20 கல் தொலைவில் உள்ள ஏழரை கோடி தமிழர்களான நம்மால் தடுக்க முடியவில்லை.
இந்தப் படுகொலையைக் கண்டித்து உலக நாடுகள் எதுவும் குரல் எழுப்பவில்லை. இந்தியா குரல் எழுப்பாதது மட்டுமல்லாமல், சிங்களர்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவியது.
ஈழத் தமிழர் பிரச்னையில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி பின்பற்றிய பாதையையே இப்போதுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசும் பின்பற்றுகிறது.
இலங்கைக்குச் சென்ற மோடி யாழ்ப்பாணத்துக்கு செல்லவில்லை.  சிங்கள அரசைத் திருப்திபடுத்த வேறு வகையான உதவி செய்வது தொடர்பாக அவர்களுடன் உடன்பாடு செய்து கொண்டுள்ளார்.
ஈழப் பிரச்னையில் தில்லியில் மேற்கொள்ளப்படும் ராஜதந்திரம் பலன் அளிக்கவில்லை என்பது மன்மோகன்சிங் காலம் தொடங்கி இப்போதும் தொடர்கிறது. தற்போது, சீனா நம் நாட்டைச் சுற்றி கப்பற்படைத் தளத்தை அமைத்துள்ளது. இந்திய பொருளாதாரத்தைத் தகர்க்கும் வகையில் மற்ற நாடுகளுடன் இணைந்து சீனா செயல்படுகிறது. இது என்ன ராஜதந்திரம்?
தென் கிழக்கு ஆசியாவில் சீன ஆதிகத்தை முறியடிக்க வேண்டுமானால் தமிழர்களின் உதவி இல்லாமல் செய்ய முடியாது என்பதை உணர்ந்து மத்திய அரசு தனது போக்கை மாற்றி கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தால், அதன் விளைவு எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்.
இந்துத்துவம் மெல்ல, மெல்ல தமிழகத்தில் படர்ந்து நம்மை அடிமைப்படுத்த முயற்சிக்கிறது. தொல்காப்பியர் காலம் முதல் வடமொழிப் படையெடுப்புத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது வந்துள்ள அபாயத்தை முறியடிக்காவிட்டால் தமிழினம் மறைந்துவிடும். எனவே, இந்துத்துவ பாசிசத்தை  முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம் என உறுதி ஏற்போம் என்றார் நெடுமாறன்.
நிகழ்ச்சியில் புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன், திரைப்பட இயக்குநர் கெளதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com