ஜூன் 1 முதல் விவசாயிகளுக்கு நேரடி உர மானியம்: ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசு வழங்கும் உர மானியம் ஜூன் 1-ஆம் தேதி முதல் நேரடியாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசு வழங்கும் உர மானியம் ஜூன் 1-ஆம் தேதி முதல் நேரடியாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
மத்திய அரசு வழங்கும் உர மானியம் விவசாயிகளுக்கு நேரடியாகச் சென்றடையும் வகையில் மாவட்டத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் நேரடி உர மானிய முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் தங்களது ஆதார் எண் மூலமாகவே உரம் வாங்க முடியும். இந்த முறை மூலம் மானிய விலையில் விற்கப்படும் உரங்கள் விவசாயிகளை மட்டுமே சென்றடையும். உரக் கடத்தல் தவிர்ப்பு உறுதி செய்யப்படும்.
இதன்படி, மாவட்டத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் உரங்கள் அனைத்தும் தானியங்கி கருவி (பி.ஓ.எஸ்.) மூலம் ஆதார் அட்டை உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும்.
மேலும், தானியங்கி கருவி உள்ள சில்லறை உர விற்பனையாளர்களுக்கு உர நிறுவனங்களும், மொத்த விற்பனையாளர்களும் மட்டுமே உர விற்பனை செய்ய இயலும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லறை உர விற்பனையாளர்கள் தனியார், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் செயலர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நேரடி உர மானியம் வழங்கும் விதமாகத் தானியங்கி கருவியைப் பயன்படுத்தி உரங்களை விற்பனை செய்யக்கூடிய அறிமுகப் பயிற்சி புதன்கிழமை (மே 17) முதல் வெள்ளிக்கிழமை வரை 3 பிரிவுகளாக நடைபெற்று வருகிறது.
எனவே, விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும்போது அவர்களுடைய ஆதார் எண் தானியங்கி கருவியில் பதிவு செய்யப்பட்டு, அவரது விரல் ரேகையைப் பதிவு செய்தால் மட்டுமே அவருக்கு மானிய விலையில் உரம் கிடைக்கும். இதன்மூலம், விவசாயி மானியத்தில் உரம் பெற்ற விவரம் மானிய கணக்கில் பதிவாகும். விவசாயிகள் உரக் கடையில் பெறும்போது மானியம் போக மீதத் தொகையை மட்டும் அளித்தால் போதும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com