கூடுதல் மதுக்கடை அமைக்கக் கூடாது: ஆட்சியரகத்தில் கிராம மக்கள் முறையீடு

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள ஒக்கக்குடி கிராமத்தில் கூடுதலாக மதுக்கடையை அமைக்கக் கூடாது என ஆட்சியரகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை முறையிட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள ஒக்கக்குடி கிராமத்தில் கூடுதலாக மதுக்கடையை அமைக்கக் கூடாது என ஆட்சியரகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை முறையிட்டனர்.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒக்கக்குடி கிராம மக்கள் அளித்த மனு:
திருவையாறு அருகேயுள்ள பெரமூர் ஊராட்சிக்கு உள்பட்ட ஒக்கக்குடி கிராமத்தில் ஏற்கெனவே ஒரு மதுபானக் கடை உள்ளது. இந்நிலையில், மீண்டும் புதிதாக ஒரு மதுபானக் கடையைத் திறப்பதற்காக அலுவலர்கள் கூறினர். இதை எதிர்த்து கிராம மக்கள் அறவழிப் போராட்டம் நடத்தினர். அப்போது, கூடுதல் மதுக்கடை திறக்கப்படமாட்டாது என வட்டாட்சியர் உறுதி அளித்தார். பின்னர், இதுதொடர்பாக நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் கூடுதல் கடை திறக்கப்படமாட்டாது என அலுவலர்கள் உறுதி அளித்தனர்.
ஆனால், தற்போது கூடுதல் மதுக்கடையைத் திறக்கப் போவதாகக் கூறினர். கோயில் அருகே அமைக்கப்படவுள்ள இக்கடையால் கோயிலுக்கு வரும் பெண்கள், பக்தர்கள் மிகப் பெரிய இடையூறுக்கு ஆளாவர். இதுபோல, கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவர். எனவே, அப்பகுதியில் கூடுதல் மதுக்கடையை அமைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை தேவை
இதேபோல, தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் சதா. சிவக்குமார் தலைமையில் ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட கோவிலூரைச் சேர்ந்த சி. முத்துக்குமார் உள்ளிட்டோர் அளித்த மனு:
கோவிலூரில் அண்மையில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் ஒரு பிரிவினர் தாக்கப்பட்டார். 
பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது மற்றொரு பிரிவினர் வழி மறித்து தாக்கினர். மேலும், 3 பேரை கடத்திச் சென்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com