செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை கோரி ஒவ்வொரு கிராமத்திலும் தொடர் உண்ணாவிரதம்: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது

செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தஞ்சாவூரில் நடைபெற்ற பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை மாலை இக்கூட்டம் நடைபெற்றது.
செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அனைத்து வகையிலும் பொருத்தமானது என தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டு, மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.  இந்நிலையில்,  தனி நபர்களின் அரசியல் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப செங்கிப்பட்டியில் அமைக்கப்படுவதை மாற்றுவதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதில், தமிழக அரசும் அலட்சியப் போக்கில் செயல்படுவது வருந்தத்தக்கது. இதுதொடர்பாக மத்திய அரசின் அலுவலர்களை தமிழக அரசின் சுகாதாரத் துறை அலுவலர்கள் சந்திக்க உள்ள நிலையில் சரியான முடிவு எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி செங்கிப்பட்டியில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நாள் உண்ணாவிரதம் என்ற அடிப்படையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், இதுதொடர்பாக விரிவான ஆலோசனை செய்வதற்காக செங்கிப்பட்டியில் மார்ச் 17-ம் தேதி கூட்டம் நடத்துவது, மன்னை விரைவு ரயிலுக்குப் பதிலாக தஞ்சாவூரில் இருந்து சென்னைக்குப் புதிய ரயில் இயக்க வலியுறுத்தி மார்ச் 20-ம் தேதி நடத்தப்படுவதாக இருந்த கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்திவைப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பி.எஸ். அமீது, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி. சந்திரகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பி. செந்தில்குமார், ஐ.ஜே.கே.  ச. சிமியோன் சேவியர்ராஜ்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏகராஜ்,  ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர் அய்யனாபுரம் க. நடராஜன்,  பாபநாசம் டி. சரவணன்,  ரயில் பயணிகள் சங்கச் செயலர் ஆர்.பி. முத்துக்குமரன்,  ஏஐடியுசி மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com