7,000 ஹெக்டேரில் தென்னை, வாழை சேதம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக ஏறத்தாழ 7,000 ஹெக்டேரில் தென்னை, வாழை மரங்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக ஏறத்தாழ 7,000 ஹெக்டேரில் தென்னை, வாழை மரங்கள் சேதமடைந்தன. மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக பட்டுக்கோட்டை,  ஒரத்தநாடு,  பேராவூரணி ஆகிய வட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இப்பகுதியில்தான் தென்னை மர சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், கஜா புயல் காரணமாக மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஏறத்தாழ 5,000 ஹெக்டேரில் தென்னை மரங்கள் சாய்ந்தன. இதில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, தேங்காய்க்கு விலை கிடைக்காத நிலையில் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகி உள்ளனர். எனவே, ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன் தெரிவித்தது: ஒரு ஏக்கருக்கு சராசரியாக 75 மரங்கள் இருக்கும். இதில், ஆண்டுக்கு 8 முறை தேங்காய் பெறப்படும். இதன் மூலம், ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வருவாய் கிடைக்கும். இப்போது, அது பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஏக்கருக்கு ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார் சுகுமாரன். மேலும்,  திருவையாறு,  திருக்காட்டுப்பள்ளி பகுதியில் வாழை மரங்கள் பாதியாக முறிந்து சாய்ந்தன. மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2,000 ஹெக்டேரில் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் தெரிவித்தது: வாழை மரங்கள் பாதியாக முறிந்துவிட்டதால் இனிமேல் அதை பிழைக்க வைக்கவும் முடியாது. ஒரு வாழைக்கு ரூ. 150 முதல் ரூ. 200 வரை செலவாகிறது. எனவே,  ஏக்கருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல, வெற்றிலையும் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஏக்கருக்கு ரூ. ஒரு லட்சம் வழங்க வேண்டும் என்றார்அவர். ஆனால்,  நெல் சாகுபடிக்கு பாதிப்பு ஏற்பட்டதாக
இதுவரை புகார் வரப்பெறவில்லை என வேளாண்மைத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com