தமிழ்ப் பல்கலை. பதிப்பு நூல்கள் 50% தள்ளுபடி விற்பனை தொடக்கம்

அண்ணா பிறந்த நாளையொட்டி தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறையில்

அண்ணா பிறந்த நாளையொட்டி தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறையில் 50 சதவீதத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
இந்த விற்பனையைத் தொடங்கி வைத்த துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் செ. சுப்பிரமணியன் பேசியது:
தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறையில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, தொல்லியல் போன்ற பல துறை சார்ந்த ஆய்வு நூல்களை 1983 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.  
இந்நூல்கள் மிகச் சிறந்த முறையில் தமிழர்களின் வாழ்வியற் செய்தியை வெளிக்கொணர்கின்றன. இதுவரை பதிப்புத் துறை மூலம் 509 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் வாழ்வியற் கலைக் களஞ்சியங்கள், அறிவியல் கலைக் களஞ்சியங்கள் , அகராதிகள், தொல்லியல் சார்ந்த நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவை பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளன. அனைத்து மக்களுக்கும் இந்நூல்கள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அண்ணா பிறந்த நாளான செப். 15-ம் தேதியையொட்டியும், தமிழ்ப் புத்தாண்டை ஒட்டியும்  ஒரு மாத காலத்துக்கு 50 சதவீதச் சிறப்புத் தள்ளுபடி  விற்பனை செய்யப்படுகிறது. 
தமிழ் பல்கலைக்கழகப் பதிப்புத் துறையின் உயரிய நோக்கத்தை உணர்ந்து கொண்ட தமிழக அரசு இந்நூல்களை மறுபதிப்பு செய்வதற்காக ஆண்டுக்கு ரூ. 2 கோடி வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 8 கோடி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இன்னும் பல நூல்கள் மறுபதிப்பு செய்து,  தமிழ்ப் புத்தாண்டில் 
விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என்றார் சுப்பிரமணியன்.
இவ்விழாவில் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் சி. ராஜேந்திரன், பதிவாளர் ச.முத்துக்குமார், பதிப்புத் துறை இயக்குநர் (பொ) உ. பாலசுப்பிரமணியன், நூல் விற்பனையாளர் மு. ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com