டீசல் சிக்கனத்தில் சிறப்பான செயல்பாடு: கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகத்தில்  500 தொழிலாளர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தில் டீசலை சிக்கனமாக பயன்படுத்திய 500 தொழிலாளர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தில் டீசலை சிக்கனமாக பயன்படுத்திய 500 தொழிலாளர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் மற்றும்  பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து நடத்திய டீசல் செயல்திறனுக்காக சாதனை புரிந்த தொழிலாளர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசு வழங்கும் விழா கும்பகோணம் போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைப்பெற்றது.
விழாவில் தஞ்சாவூர் ஆட்சியர்  ஆ. அண்ணாதுரை பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தி,  டீசல் செயல்திறனுக்காக சாதனை புரிந்த 345 ஓட்டுநர்கள், 59 நடத்துநர்கள், 36 தொழில்நுட்ப பணியாளர்கள், 18 டீசல் பொறுப்பாளர்கள், 6 ஓட்டுநர் கண்காணிப்பாளர்கள், 18 பொறியாளர்கள், 12 கிளை மேலாளர்கள், 6 தொழில்நுட்ப உதவி மேலாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
முன்னதாக, தொழில்நுட்ப துணை மேலாளர் கே. ஆதப்பன் வரவேற்றார். இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக  கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் பி. ரவீந்திரன் பேசியது: 
தமிழக அளவில் டீசல் செயல் திறனுக்காக கும்பகோணம் கோட்டம் தொடர்ந்து 4 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வருகிறது. ஒரு கிலோ மீட்டருக்கு தற்போது 5.72 கிலோ மீட்டர் இயக்கப்படுகிறது. இதனை அதிகரித்து நடப்பாண்டுக்குள் நாம் 5.90 கிலோ மீட்டராக உயர்த்த வேண்டும். அதே நேரத்தில் தொழிலாளர்கள் உயிரிழப்புகளை குறைத்து சேவை மற்றும் லாபத்தினை அதிகரித்தோம் என்றால் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் பணப்பலன்களை வழங்க முடியும் என்றார்.
இதில் கும்பகோணம் மண்டல  பொதுமேலாளர் ஆர். அனுஷம்,  திருச்சி மண்டல பொதுமேலாளர் கே. குணசேகரன், கரூர் மண்டல பொதுமேலாளர் எஸ்.எஸ். ராஜ்மோகன்,  புதுக்கோட்டை மண்டல பொது மேலாளர் ஏ. ஆறுமுகம்,  காரைக்குடி மண்டல பொதுமேலாளர் பி. செல்வகோமதிகுமார், நாகப்பட்டினம் மண்டல பொது மேலாளர் கே. தசரதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் பிராந்திய மேலாளர்கள் மனோஜ்மேனன், ஆசுபாரதி  ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், அனைத்து அலுவலர்கள், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com