புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள 42 கிராமங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

தாமரை பன்னாட்டுப் பள்ளி சார்பில்...
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள 42 கிராமங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமரை பன்னாட்டுப் பள்ளி சார்பில் நிவாரண உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
குறிப்பாக, புயலால் பாதிக்கப்பட்ட ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், தம்பிக்கோட்டை ஆகிய கிராமங்களில் 3,000-க்கும் அதிகமான குடும்பங்களுக்கு தொடக்கக் காலத்தில் நாள்தோறும் மூன்று வேளைக்கு  உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. 
மேலும், அடிப்படைத் தேவைகளான மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, மருந்துகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.
தவிர, அறக்கட்டளை, பல்வேறு அமைப்புகள், தனி நபர்களிடமிருந்து பெறப்பட்ட மளிகைப் பொருட்கள், ஆடைகள், பாய்கள், துண்டுகள், தார்பாலின், கொசுவர்த்தி, போர்வை உள்ளிட்டவை  அதிராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள 42 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

காருண்யா பல்கலை. சார்பில்...
பேராவூரணி,  டிச. 6:  பேராவூரணி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் கோவை காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் சீஷா தொண்டு நிறுவனம் இணைந்து நிவாரணப் பொருள்கள் வழங்கின. மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. 
பேராவூரணி  அருகேயுள்ள ஊமத்தநாடு ஊராட்சியில் காருண்யா பல்கலைக்கழக  நாட்டுநலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள்  40 பேர்,  தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 500 குடும்பங்களுக்கு அரிசி, சோப்பு, பற்பசை, சமையல் எண்ணெய் கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினர். ஊமத்தநாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சீஷா தொண்டு நிறுவன மருத்துவர்கள் சாமுவேல், தாமஸ், மனோஜ், ஜெபசிங் ஆகியோர் கொண்ட குழுவினர் மருத்துவ ஆலோசனை வழங்கி,  மருந்து மாத்திரைகளை வழங்கினர். மேலும்,  இந்த பகுதியில் 1000-ம் மரக்கன்றுகள் நடவும்,  புயலால் பாதிக்கப்படாத தென்னங்கன்றுகள் நடவும் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக,  மாணவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். பதிவாளர் எலைஜா பிளசிங், இணைவேந்தர் இ.ஜே.ஜேம்ஸ் மற்றும் துறை தலைவர்கள் உடனிருந்தனர். ஏற்பாடுகளை பேராசிரியர் கார்த்திகேயன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.

ராஜராஜன் கல்வி  பண்பாட்டுக் கழகம்  சார்பில்...
தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராஜராஜன் கல்விப் பண்பாட்டுக் கழகத்தினர் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அண்மையில் வழங்கினர்.
இதுகுறித்து கழகத்தின் மாநில ஆலோசகர் வ. பழனியப்பன் தெரிவித்திருப்பது:தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராஜராஜன் கல்விப் பண்பாட்டுக் கழகத்தின் சென்னை, கோவை, சேலம், திருச்சி, பெங்களூர் மாவட்ட உறுப்பினர்கள் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அண்மையில் வழங்கினர்.
இதில், மரம் அறுக்கும் இயந்திரம், தார்பாய், உணவுப் பொருட்கள், ஆடைகள், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிரந்தர உதவிகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.


அரசு நர்சுகள் சங்கத்தினர் சார்பில்...
தஞ்சாவூர் அருகே துறையூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தினர்,  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதன்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினர் .
இதில்,  ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடிப்படை தேவைகளான அரிசி, பருப்பு, கோதுமை, ரவா, சேமியா, எண்ணெய், போர்வை, துண்டு உள்ளிட்ட பொருட்களைச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் கே. வளர்மதி உள்ளிட்டோர் வழங்கினர். கிட்டத்தட்ட 300 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
பின்னர், வளர்மதி தெரிவித்தது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சுகாதாரத் துறை அமைச்சர், உயர் அலுவலர்கள் ஆலோசனைப்படி, தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் ஏறத்தாழ 4,500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மேலும், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,  அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையுடன் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தினோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com