போலீஸாரால் தாக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் இசட்.முகமது இலியாஸ் (32). எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவராக உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் இசட்.முகமது இலியாஸ் (32). எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவராக உள்ளார்.
இவர், கடந்த 1-4-2013 இரவு மோட்டார் சைக்கிளில் புதுப்பட்டினம் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அப்போதைய காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜ்கமல், ரவிச்சந்திரன் (அதிராம்பட்டினம்), முத்துலெட்சுமி (பட்டுக்கோட்டை) ஆகியோர் முகமது இலியாஸை கடுமையாக பேசி,  தாக்கியதுடன் அவருடைய செல்லிடப்பேசியையும் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.  
இதையடுத்து, சம்பவம் நடந்த மறுநாளே (2.4.2013-ல்) அத்துமீறி நடந்து கொண்ட உதவி ஆய்வாளர்கள் 3 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென,  சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்துக்கு பதிவு அஞ்சலில் புகார் மனு அனுப்பினார் முகமது இலியாஸ். 
மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது உதவி ஆய்வாளர்கள் 3 பேரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக, அவர்கள் மூவருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.  இந்த தொகையை தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் மனுதாரருக்கு வழங்கி விட்டு, அந்தத் தொகையை உதவி ஆய்வாளர்கள் மூவரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என 26.7.2018-இல்  உத்தரவிட்டார்.
அதன்படி, தமிழக அரசிடம் இருந்து அனுப்பப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ.75 ஆயிரத்துக்கான காசோலை அதிராம்பட்டினம் காவல் நிலையத்துக்கு அண்மையில் வந்து சேர்ந்தது.  இதுபற்றி தகவலறிந்த முகமது இலியாஸ் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) அதிராம்பட்டினம் காவல் நிலையம் சென்று காவல் நிலைய எழுத்தர் பழனிவேலிடம் இருந்து  ரூ.75 ஆயிரத்துக்கான காசோலையைப் பெற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com