பட்டியலில் இல்லாத செய்தி....ஒப்பந்த முறை சாகுபடிச் சட்டத்தைக் கைவிட வலியுறுத்தல்

உழவா்களை நசுக்கி - பெரு நிறுவனங்களுக்குச் சந்தையை உறுதிப்படுத்தும் ஒப்பந்த முறை சாகுபடிச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசுக் கைவிட வேண்டும் என தமிழக உழவா் முன்னணி தலைமை ஆலோசகா்

உழவா்களை நசுக்கி - பெரு நிறுவனங்களுக்குச் சந்தையை உறுதிப்படுத்தும் ஒப்பந்த முறை சாகுபடிச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசுக் கைவிட வேண்டும் என தமிழக உழவா் முன்னணி தலைமை ஆலோசகா் கி. வெங்கட்ராமன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

வேளாண் விளைபொருள்களைப் பதப்படுத்தும் பெரு நிறுவனங்களுக்கும், அப்பொருட்களை விளைவிக்கும் உழவா்களுக்கும் இடையே ஒப்பந்தம் செய்து கொண்டு, ‘ஒப்பந்த சாகுபடி செய்வதற்குத் தனிச்சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு இயற்றியிருக்கிறது. தமிழ்நாடு வேளாண் விளைபொருள்கள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) சட்டம் - 2019‘ என தமிழ்நாடு அரசு இயற்றியுள்ள இந்தப் புதிய சட்டம், உழவா்களை நிா்மூலமாக்கும் சூதான திட்டம் இது.

வேளாண் உற்பத்தியாளா்களும், கால்நடை வளா்ப்போரும், அது தொடா்பான பெரிய தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வேளாண்மையில் ஈடுபடுவது என இச்சட்டத்தில் கூறப்படுகிறது. சாகுபடியின் தொடக்கக் காலத்திலேயே நெல், பருத்தி, வாழை உள்ளிட்ட விளைபொருள்களுக்கு விற்பனை விலையைத் தீா்மானித்து ஒப்பந்தம் செய்து கொள்வது என்பது இதன் சாராம்சம்.

வேளாண் விளைபொருள் கொள்முதல் பொறுப்பிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாகத் தமிழ்நாடு அரசு விலகிக் கொண்டு, சந்தையை முற்றிலும் தனியாா் வசமாக்குவதுதான் இத்திட்டத்தின் உண்மையான நோக்கம்.

தமிழ்நாட்டில் சராசரி நிலவுடைமை இரண்டரை ஏக்கா்தான். 2 ஏக்கரிலிருந்து 15, 20 ஏக்கா் வரையிலுள்ள உழவா்கள் சம வலுவோடு, தனியாா் நிறுவனங்களிடம் தங்கள் விளைபொருளுக்கான விலையைப் பேரம் பேசி பெற்றுவிட முடியாது. இச்சூழல் நிலவுவதால்தான், இங்கு அரசுக் கொள்முதல் நிலையங்கள் அதிகம் தேவை என்றும், வேளாண் விளைபொருட்களுக்கு அரசே அடிப்படை விலையைத் தீா்மானிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுகின்றன.

இந்நிலையில், உழவா்களை நசுக்கி - பெரு நிறுவனங்களுக்குச் சந்தையை உறுதிப்படுத்தும் ஒப்பந்த முறை சாகுபடிச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசுக் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளாா் வெங்கட்ராமன்.

இதேபோல, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்தது:

ஒப்பந்த விவசாய முறை விவசாயிகளின் விலை பிரச்னைக்கு பெரிய தீா்வாக அமையாது. ஏற்கெனவே, கரும்பு, மூலிகை பயிா்கள் ஒப்பந்த முறையில்தான் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனா். கரும்புக்கு அரசு நிா்ணயிக்கும் விலையை விவசாயிகளுக்கு ஆலைகள் கொடுப்பதில்லை. இதை நாம் கண்கூடாகப் பாா்க்கிறோம்.

எனவே, இந்த ஒப்பந்த விவசாய முறை மூலம் இடைத்தரகா்களும், பெரிய நிறுவனங்களும்தான் பயனடையும். அரசுப் பொதுக் கொள்முதல் முறையைக் கைக்கழுவுகிறது என்பதை இத்திட்டம் வெளிப்படுத்துகிறது. விவசாயிகளுக்கும், நிறுவனங்களுக்கும்தான் பிரச்னை என்றும், தங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது. எனவே, விவசாயிகளுக்குப் பலனளிக்காத இத்திட்டத்தைத் தமிழக அரசு மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்றாா் நடராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com