ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு இன்று புவிசார் குறியீடு

கோப்புப் படம்
கோப்புப் படம்

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு செவ்வாய்க்கிழமை (செப்.10) புவிசார் குறியீடு கிடைக்கவுள்ளது என்றார் அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர் சங்கத் தலைவர் பி. சஞ்சய் காந்தி.

இதுகுறித்து தஞ்சாவூரில் திங்கள்கிழமை இரவு செய்தியாளர்களிடம் தெரிவித்தது: 

தமிழகத்தில் இதுவரை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை,  தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, பத்தமடை பாய்,  பவானி ஜமுக்காளம்,  மாமல்லபுரம் கற்சிற்பம்,  மதுரை சுங்கடி சேலை உள்பட 31 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. 

தற்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு செவ்வாய்க்கிழமை கிடைக்கவுள்ளது. இது தொடர்பாக, 2013 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இதன் வரலாறு, அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு, இப்போது புவிசார் குறியீடு கிடைக்கிறது. அண்மையில் திண்டுக்கல் பூட்டு,  காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்தது.

மேலும், கோவில்பட்டி கடலை மிட்டாய்,  மணப்பாறை முறுக்கு உள்பட 18 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கும் புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் சஞ்சய் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com