பட்டுக்கோட்டையில் அமமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
By DIN | Published On : 04th April 2019 08:36 AM | Last Updated : 04th April 2019 08:36 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை பிள்ளையார் கோயில் தெருவில் அமமுக தேர்தல் அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
தஞ்சை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் பொன்.முருகேசன் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசியது:
தேர்தலில் நான் வெற்றி பெற்றால் ஆண்டுதோறும் தஞ்சை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த 2,000 ஏழை மாணவர்களுக்கு எனது கல்வி நிறுவனங்களில் இலவசக் கல்வி வழங்குவேன்.
மேலும், நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் நிதி அல்லாமல், எனது சொந்த நிதியிலிருந்து 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஆண்டுக்கு தலா ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து மக்களுக்குத் தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றார்.
நிகழ்ச்சிக்கு, அமமுக மாநில அமைப்புச் செயலர் பண்ணைவயல் சு.பாஸ்கர் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலர் மா.சேகர் முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர்பாபு, நகரச் செயலர் வி.எம்.பாண்டியராஜன், ஒன்றியச் செயலர்கள் தம்பி ரமேஷ், ரவி (பட்டுக்கோட்டை), ராஜபிரபு, தென்னரசு (மதுக்கூர்) உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.