கல்வி மனிதாபிமானத்தை மேம்படுத்துகிறது: சுதா சேஷய்யன்

கல்வியானது மனிதர்களின் மனிதாபிமானத்தை மேம்படுத்துகிறது என்றார் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுதா சேஷய்யன்.

கல்வியானது மனிதர்களின் மனிதாபிமானத்தை மேம்படுத்துகிறது என்றார் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுதா சேஷய்யன்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற 18 ஆம் ஆண்டு பல்கலைக்கழக நாள் விழாவில் அவர் மேலும் பேசியது:
கல்வி என்பது நமக்கு அறிவை தருவது மட்டுமல்லாமல், அதன் மூலம் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பதவிகள், அதிகாரங்கள் போன்றவற்றையும் கொடுக்கிறது.  
மனித நாகரிகம் வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் மனித ஆற்றல் மட்டுமல்ல; குதிரைகள், நாய்களின் நட்பு மூலமே மனித நாகரிகம் வளர்ச்சி அடைந்தது. குதிரைகள் இல்லாவிட்டால், நெடுந்தொலைவை எட்டுவதில் மனிதனால் வெற்றி பெற்றிருக்க முடியாது. மனித மனம் குரங்குபோல ஓரிடத்தில் நிலைத்து இல்லாமல், குரங்கைப் போன்று ஒவ்வொரு கிளையாகத் தாவிக் கொண்டே இருக்கும். அதனால், மனம் ஒரு குரங்கு என முன்னோர்கள் கூறினர். சில நெறிகளுடன் செயல்பட்டால் மனதைக் கட்டுப்படுத்தி நிலையாக வைத்திருக்க முடியும்.
நெறிகள் மிக்க கல்வியைக் கற்கும்போது, அது ஆரோக்கியமான கல்வியாக அமைகிறது. கல்வி நம்மை முழுமையான மனிதனாகவும், பொறுப்புள்ளவனாகவும், தோழமை மிக்கவனாகவும், சமூக ஈடுபாடுள்ளவனாகவும் ஆக்குகிறது என்றார் சுதா சேஷய்யன்.
பின்னர், 2019 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடிக்கும் சிறந்த மாணவருக்கான காமகோடி விருது ஜெ.எஸ். சரத்துக்கு, சுதா சேஷய்யன் வழங்கினார். மேலும், ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பல்வேறு சிறப்பு ரொக்கப் பரிசுகளும் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். வைத்தியசுப்பிரமணியம், முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன், பதிவாளர் ஆர். சந்திரமெளலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com