"புதிய கல்விக் கொள்கையை கைவிட  மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும்'

புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வலியுறுத்தி மத்திய அரசை அனைத்து தமிழர்களும் நிர்பந்திக்க வேண்டும்

புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வலியுறுத்தி மத்திய அரசை அனைத்து தமிழர்களும் நிர்பந்திக்க வேண்டும் என்றார் திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் சோம. இராசேந்திரன்.
பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை இரவு தமிழர் அறம் அமைப்பு சார்பில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: 
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப்படி 3 முதல் 18 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 6 பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்.  தமிழ்வழிக் கல்வி மறுக்கப்படுகிறது. மேலும், கல்வி என்பது தனியார்மயம்,  வணிகமயம், வளாக மயம் என்றாகிவிடும். புதிய கல்விக் கொள்கையின் முகப்புரையில் சமஸ்கிருதமே இலக்கிய வளமான மொழி என்று பொய் கூறப்பட்டுள்ளது. ஆகையால் ஒட்டுமொத்த தமிழர்களும் இணைந்து பல்வேறு தீமைகளை ஏற்படுத்தும் புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டுமென இந்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் என்றார் அவர். 
தமிழர் அறம் அமைப்பின் தலைவர் சி. இராமசாமி தலைமை வகித்தார். தமிழறிஞர் அ.த. பன்னீர்செல்வம், கம்பன் பேரவை ஒருங்கிணைப்பாளர் சா.க. கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டுக்கோட்டை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர்  இரா.பிரகாசம், அறிவுறுவோன் (உலகத் தமிழ்க் கழகம்), தமிழ்வழிக்கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் அ.சி. சின்னப்ப தமிழர், தொலைதொடர்புத்துறை சிவ. சிதம்பரம், பேராசிரியர் (ஓய்வு) கோவி. சந்திரசேகர், ஆசிரியர் (ஓய்வு) ரெ. வீரமணி, முத்துப்பேட்டை முத்தமிழ்ப் பேரவை செந்தில், கணே. மாரிமுத்து (தமிழின உணர்வாளர் கூட்டமைப்பு) ஆகியோர் பேசினர். 
தீங்கு விளைவிக்கும் புதிய கல்விக் கொள்கையை இந்திய அரசு கைவிடவில்லை என்றால், நவ. 1-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரகம் எதிரில் தமிழர் அறம் அமைப்பின் தலைவர் சி. ராமசாமி தலைமையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அறிக்கை நகலை குழிதோண்டிப் புதைக்கும் போராட்டம்"நடத்தப்படும் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 
தமிழிசைப் பாடகர் நாவலரசன் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  தமிழின உணர்வாளர் மா. மணி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com