கல்லணை ஆக. 16-இல் திறக்க வாய்ப்பு: ஆட்சியர் ஆய்வு

மேட்டூர் அணை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டததைத் தொடர்ந்து கல்லணை வெள்ளிக்கிழமை (ஆக. 16) திறக்கப்பட வாய்ப்புள்ளது. 

மேட்டூர் அணை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டததைத் தொடர்ந்து கல்லணை வெள்ளிக்கிழமை (ஆக. 16) திறக்கப்பட வாய்ப்புள்ளது. 
மேட்டூர் அணைக்கு ஒரு வாரமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்தத் தண்ணீர் கல்லணைக்கு வியாழக்கிழமை (ஆக.15) இரவு அல்லது 16-ம் தேதி அதிகாலை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை கல்லணை திறக்கப்படும் எனப் பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதை முன்னிட்டு, கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளுக்குத் தண்ணீர் திறந்து விடுவதற்கான கதவுகளைச் சுத்தம் செய்து, மசகு எண்ணெய் வைக்கப்பட்டது. மேலும், மதகுகளுக்கு வண்ணம் பூசுப்பட்டது. கல்லணையில் உள்ள கரிகால் சோழன் சிலை, அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, ராசராசன் சிலை, ஆஞ்சநேயர் கோயில், விநாயகர் கோயில், கருப்பண்ணசுவாமி கோயில் ஆகியவற்றுக்கும் வண்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், கல்லணையில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார் . கல்லணைக் கால்வாய் முகத்துவாரத்தில் மண்மேடுகளை உடனடியாக அகற்றி தண்ணீர் தடையின்றி செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு பொதுப் பணித் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். கதவணைகள் சரியாக இயங்குகிறதா என்பது குறித்து பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து கடைமடை வரை தண்ணீர் செல்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
பின்னர், கல்விராயன்பேட்டையில் கல்லணைக் கால்வாயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்ட  ஆட்சியர் பணிகளை விரைந்து முடித்திடுமாறு பொதுப் பணித் துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com