தூர்வாரும் பணியைக் கண்காணிக்க 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்: பொதுப்பணித் துறை முதன்மை செயலர் பேட்டி 

தூர்வாரும் பணியைக் கண்காணிப்பதற்காக 6 ஐஏஎஸ் அதிகாரிகள்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் பொதுப் பணித் துறை முதன்மை செயலர் கே. மணிவாசன்.

தூர்வாரும் பணியைக் கண்காணிப்பதற்காக 6 ஐஏஎஸ் அதிகாரிகள்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் பொதுப் பணித் துறை முதன்மை செயலர் கே. மணிவாசன்.
 கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் குடிமராமத்து திட்டப் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
 தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, நாமக்கல், புதுக்கோட்டை,
 ஈரோடு, கரூர், அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் தூர்வாருதல் மற்றும் குடிமராமத்து திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 ஆண்டுதோறும் இதுபோல தூர்வாரப்படுகிறது. இருப்பினும், நிகழாண்டு இதுவரை இல்லாத அளவுக்குத் தூர்வாரும் பணிக்காக ரூ. 60.85 கோடியும், குடிமராமத்து திட்டத்துக்கு ரூ. 500 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், காவிரி டெல்டாவில் உள்ள மாவட்டங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 29 மாவட்டங்களில் 1,800-க்கும் அதிகமான குடிமராமத்து பணிகள் செய்யப்படுகின்றன. நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதும், கடைமடை வரை வேளாண் சாகுபடிக்குத் தண்ணீர் சென்றடைய வேண்டும் என்பதும்தான் அரசின் நோக்கம். தூர்வாரும் பணியின் தரம், அளவைக் கண்காணிப்பதற்காக 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 வெளிமாவட்டங்களில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்குக் கூடுதல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரு வாரங்களில் அனைத்து பணிகளும் இரவு பகலாக பாடுபட்டு செய்து முடிக்கப்படும் என்றார் மணிவாசன்.
 முன்னதாக, தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் பொதுப் பணித் துறை அலுவலர்களுடன் குடிமராமத்து பணிகளின் முன்னேற்றம் குறித்தும், தூர்வாருதல் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் அரசு முதன்மைச் செயலர் கலந்தாய்வு செய்தார்.இதில், ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, தூர்வாரும் பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர் ராஜகோபால் சுன்காரா, பொதுப் பணித் துறைத் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, தஞ்சாவூர் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com