"புதிய கல்விக் கொள்கைக் குழந்தைகளுக்கு எதிரானது'

மத்திய அரசுக் கொண்டு வரவுள்ள புதிய கல்விக் கொள்கை குழந்தைகளுக்கு எதிரானது என்றார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

மத்திய அரசுக் கொண்டு வரவுள்ள புதிய கல்விக் கொள்கை குழந்தைகளுக்கு எதிரானது என்றார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
 தஞ்சாவூரில் சிந்தனை மேடை சார்பில் புதன்கிழமை மாலை நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை - 2019 என்ற கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது:
 கல்விக் கொள்கை என்றால், அரசின் திட்டவட்டமான நிலைப்பாடு இருக்க வேண்டும். ஆனால், இந்தப் புதிய கல்விக் கொள்கையில் திட்டவட்டமான நிலைப்பாடு இல்லை என்பது வெளிப்பட்டுள்ளது.
 புதிய கல்விக் கொள்கையில் இந்தி கட்டாயமில்லை என்றும், மூன்றாவது மொழியை மாணவர்களே தீர்மானிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால், மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய அரசின் வாக்குறுதிக்கும், செயல்பாடுக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
 இந்தப் புதிய கல்விக் கொள்கையில் தேசிய கல்வி ஆய்வு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் அமைக்கப்படும் இக்குழுவில் 20 - 30 உறுப்பினர்கள், சில மாநில முதல்வர்கள் மட்டும் இடம்பெறுவர். இதில், உறுப்பினர்களாக எந்தவொரு காலத்திலும் பெரும்பாலான முதல்வர்கள் இடம்பெற முடியாது.
 மேலும், தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்படவுள்ளது. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கல்லூரியும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை இந்த ஆணையம்தான் தீர்மானிக்கும். இது, மாநில அரசின் உரிமையை மத்திய அரசுப் பறிக்கும் விதமாக உள்ளது. மேலும், நம்முடைய அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் அதிகாரமும் குறைந்துவிடும். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு உள்ளது.
 அடிப்படைக் கல்வியில் 3 வயது முதல் 14 வயது வரையிலான மாணவர்கள் பாடத்துடன் தொழிற்கல்வியையும் பயில வேண்டும் என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. இந்தத் தொழிற் கல்வியில் தோட்டக்கலை, மின்சார வேலை, மர வேலை, மண்பாண்டம் தயாரிக்கும் வேலை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. மின்சாரம், மர வேலை உள்ளிட்ட தொழில்களுக்கான சாதனங்களையோ, ஆயுதங்களையோ 3 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளால் எவ்வாறு கையாள முடியும். மேலும், இந்த வயதில் இத்தொழில்களில் முழுமையாக ஈடுபடும்போது மாணவர்களால் எப்படி பாடம் படிக்க முடியும். பாடம் கற்பதற்கான ஆர்வத்தைக் குறைக்கும் விதமாகவே புதிய கல்விக் கொள்கை உள்ளது. இதன் மூலம், குழந்தைகள் தானாகவே கல்வியை விட்டு விலகிச் செல்லும் நிலை உருவாகும். பாடம், தொழிற்கல்வி மட்டுமல்லாமல் மூன்றாவது மொழியைக் கற்க வேண்டும் என புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. ஒற்றை மொழிக் கொள்கை வலியுறுத்தப்படும் நிலையில் மூன்றாவது மொழி தேவையற்றது. அந்த நேரத்தில் கணிதமோ, அறிவியலோ படிக்க வைக்கலாம். புதிய கல்விக் கொள்கையில் கற்றல் விஷயத்தை விட மூன்றாவது மொழிக்கான முக்கியத்துவம்தான் அதிகமாக உள்ளது.
 எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டம், மாநில உரிமை, கூட்டாட்சி, குழந்தைகளின் உரிமை ஆகியவற்றுக்கு எதிராகவே புதிய கல்விக் கொள்கை உள்ளது. இதை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்றார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
 இக்கருத்தரங்கத்துக்கு வழக்குரைஞர் அ. நல்லதுரை தலைமை வகித்தார். பொறியாளர் ஜோ. ஜான் கென்னடி, பேராசிரியர் வி. பாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com