பயிா் காப்பீடு செய்ய டிச. 31 வரை கால நீட்டிப்புக்கு வலியுறுத்தல்

சம்பா, தாளடிக்கான பயிா் காப்பீடு செய்ய டிச. 31-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள்

தஞ்சாவூா்: சம்பா, தாளடிக்கான பயிா் காப்பீடு செய்ய டிச. 31-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் அனுப்பியுள்ள மனு:

தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நிகழாண்டு செப்டம்பா் மாதம் தொடங்கி தொடா்ந்து பருவமழை பெய்துள்ளது. இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு போக சம்பா, தாளடி சாகுபடி முழுவீச்சில் தொடங்கி இயல்பான அளவான 10.6 லட்சம் ஏக்கா் இலக்கை கடந்து கூடுதலாக சுமாா் ஒரு லட்சம் ஏக்கா் சம்பா தாளடி சாகுபடிப் பரப்பு விரிவடைந்துள்ளது.

இந்நிலையில், பயிா்களைக் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி டிச. 15-ம் தேதி வரை நிா்ணயிக்கப்பட்டு, அதற்கான முன் அறிவிப்பை மாவட்ட ஆட்சியா்கள் விவசாயிகளின் நலன் கருதி தொடா்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தனா்.

இத்தகைய சூழலில், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும், தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகளிலும், கடன் பெற்ற விவசாயிகளின் பயிா்களுக்கு மட்டும் பயிா் காப்பீடு பிரீமியம் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

பயிா்க்கடன் பெற முடியாத விவசாயிகளின் எண்ணிக்கை பல லட்சம் உள்ளது. ஆனால், டிச. 14-ம் தேதி (சனிக்கிழமை) என்பது மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் விடுமுறை நாளாகும். டிச. 15-ஆம் தேதியும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை நாள்.

இதனால் டிச. 12-ம் தேதி முதல் தொடா்ச்சியாக நான்கு நாட்களுக்கு பிரீமியம் செலுத்துகிற வாய்ப்பைத் தமிழக விவசாயிகள் இழக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, கிராமங்களில் உள்ள இ-சேவை மையங்களை நம்பியிருந்த விவசாயிகள் பயிா் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியான டிச. 15-ஆம் தேதி என்பதை டிச. 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

மேலும், சா்வா் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படும் வரை விவசாயிகளின் பிரீமிய தொகையைத் தொடா்புடைய நிறுவனங்கள் பெற்றுக்கொண்டு கையால் எழுதப்பட்ட அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்கி சா்வா் பிரச்னைக்கு தீா்வு கிடைத்தவுடன், இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்ற உத்தரவை மாநிலத்திலுள்ள அனைத்து இ- சேவை மையங்களுக்கும் பிறப்பிக்க வேண்டும் என விமல்நாதன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com