பட்டுக்கோட்டை அருகே  புயல் நிவாரணம் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

பட்டுக்கோட்டை ஒன்றியம், கரம்பயம் ஊராட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணம்

பட்டுக்கோட்டை ஒன்றியம், கரம்பயம் ஊராட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
தஞ்சை - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் நடைபெற்ற சாலை மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எம். செல்வம் தலைமை வகித்தார்.  ஆர்.ஜீவானந்தம் (விவசாயிகள் சங்கம்)  கே. மாரிமுத்து (விதொச),  சாந்தி (மாதர் சங்கம்) மற்றும் பொதுமக்கள் என பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
கரம்பயத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு,  விடுபட்ட 98 குடும்பங்களுக்கு நிவாரணப் பெட்டகம் வழங்க வேண்டும். ஓட்டு வீடு, குடிசை வீடு பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரணம் முழுமையாக வழங்க வேண்டும்.  நுண் கடன் நிதிநிறுவனத்தில் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன்களை ஓராண்டு காலத்திற்கு கால நீட்டிப்பு செய்து வசூல் செய்ய வேண்டும். அரசின் நிவாரணம் பெற்ற விவசாயிகளின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும். 100 நாள் வேலையை தினந்தோறும் வழங்க வேண்டும். 
பழுதடைந்துள்ள காலனி வீடுகளை இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.  சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள்பிரகாசம், டிஎஸ்பி (பொறுப்பு) காமராஜ்,  காவல் ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் பேச்சு நடத்தினர். இன்னும் 1 வாரத்தில் பிரச்னைகள் அனைத்தும் சரி செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com