தமிழக அரசின் ரூ.2,000 வழங்கும் திட்டம்: விண்ணப்பங்கள் வழங்க நீண்ட வரிசையில் நின்ற மக்கள்

வறுமைக் கோ ட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தமிழக அரசு ரூ. 2,000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவதற்காக

வறுமைக் கோ ட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தமிழக அரசு ரூ. 2,000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவதற்காக தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை ஆயிரத்துக்கும் அதிகமானோர் நீண்ட வரிசையில் நின்று வழங்கினர்.
கஜா புயல் பாதிப்பால், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு ஒரு முறை சிறப்பு நிதியாக ரூ. 2,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக 2010 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சமூக, பொருளாதார, ஜாதி வாரி கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டும் மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும், தெருவோர வியாபாரிகளுக்கும் இந்த நிதியுதவி வழங்குவது தொடர்பாக அலுவலர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களாகத் தங்களது பெயரையும் சேர்க்க வேண்டும் என தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இரு நாட்களாக ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.
இதில், செவ்வாய்க்கிழமை ஏறத்தாழ 1,150 பேரும், புதன்கிழமை சுமார் 1,250 பேரும் விண்ணப்பங்களை வழங்கினர். இதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் இரு சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், பொதுமக்கள் வங்கிக் கணக்குப் புத்தக நகல், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் அதற்கான விண்ணப்பத்தை நிறைவு செய்து மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கி வருகின்றனர்.
இவர்களுக்கு உதவும் விதமாக தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பங்களை நிறைவு செய்து கொடுக்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தது:
ஏற்கெனவே உள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள், அந்தியோதயா அன்ன யோஜனா, தெருவோர வியாபாரிகள் பட்டியலை சரிபார்க்குமாறு மட்டுமே அரசு அறிவுறுத்தியது. இருப்பினும், பொதுமக்கள் மனு அளிக்கின்றனர். உயர் அலுவலர்கள் அறிவுறுத்தலின் பேரில் இம்மனுக்களை பெற்று வருகிறோம்.
மாநகராட்சியில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியில் 16,307 பேர் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அலுவலர்கள் சரிபார்த்தபோது, ஏறத்தாழ 50 சதவீதம் பேர் இடம்பெயர்ந்து சென்ற விவரம் தெரிய வந்தது. நிறைய பேர் இறந்துள்ளனர். மாநகராட்சி எல்லையில் உள்ள 68 நியாய விலைக் கடைகளில் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் 2,888 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதுகுறித்தும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. தெருவோர வியாபாரிகள் பட்டியலில் உள்ள 1,032 பேர் தொடர்பாக சரிபார்க்கப்பட்டபோது, நிறைய பேர் வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டது தெரிய வந்தது. அரசின் வழிகாட்டல்கள் வந்த பிறகு இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும் என்றனர். 
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. 

கும்பகோணத்தில் முற்றுகை
கும்பகோணம் ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பெரும்பாலான கிராம மக்களின் பெயர்கள், வறுமை கோட்டின் கீழ் இல்லாததால், கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புதன்கிழமை முறையிட்டனர். ஆனால், அலுவலர் உரிய பதில் அளிக்காததால், அதிருப்தியடைந்த கிராம மக்கள், விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நாகராஜ், நாகமுத்து, கலையரசன் ஆகியோர் தலைமையில் வட்டார வளரச்சி அலுவலக வாயிலில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com