போகிக்காக பழைய பொருள்களை எரிக்க வேண்டாம்: ஆட்சியர் அறிவுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை எரிக்காமல் சுகாதாரப் பணியாளர்களிடம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை எரிக்காமல் சுகாதாரப் பணியாளர்களிடம் தரம் பிரித்து அளிக்க வேண்டும் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன் தினம் கொண்டாடப்படும் போகி நாளன்று பழையன கழிதல் என்ற அடிப்படையில் பொதுமக்கள் பழைய பொருட்களான கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு எரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.  
இப்பழைய பொருட்கள் எரிக்கப்படுவதால், சுற்றுச்சூழல் அதிகமாகப் பாதிக்கப்படாது. ஆனால், தற்போது போகி நாளன்று பொதுமக்கள் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களையும் எரிப்பதால், நச்சு கலந்த புகைமூட்டம் ஏற்பட்டு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல், புற்றுநோய் உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. 
நச்சுக் காற்றாலும், கரிப் புகையாலும், காற்று மாசுபட்டு நாம் வசிக்கும் சுற்றுச்சூழல் முழுவதுமாக நச்சுத்தன்மைக் கொண்ட கருப்பு புகை மூட்டமாக மாறிவிடுகிறது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் போகி நாளன்று தேவையற்ற பழைய பொருள்களை எரிக்காமல் தங்கள் பகுதிக்கு வரும் உள்ளாட்சி சுகாதாரப் பணியாளர்களிடம் தரம் பிரித்து அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
அவ்வாறு அளிக்கப்படும் தேவையற்ற பழைய பொருட்களை மறுசுழற்சி செய்து மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம். 
பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பை அளித்து போகி பண்டிகையை புகையில்லா பண்டிகையாகக் கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com