உம்பளப்பாடியில்அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், உம்பளப்பாடி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அச்சு வெல்ல


தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், உம்பளப்பாடி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பாபநாசம் வட்டத்தில் உம்பளப்பாடி, உள்ளிக்கடை, கணபதியக்ரஹாரம், தேவன்குடி, வீரமாங்குடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட அச்சு வெல்லம் தயாரிக்கும் பட்டறைகளில் பொங்கல் பண்டிகையை யொட்டி அச்சு வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பகுதியில் தயாராகும் அச்சு வெல்லம் தரத்திலும், நிறத்திலும், சுவையிலும் சிறப்பாக உள்ளதால், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து அச்சு வெல்லத்தை கொள்முதல் செய்து செல்கின்றனர்.
அச்சு வெல்லம் தயாரிப்பு குறித்து அந்தப் பகுதியில் அச்சு வெல்லம் தயாரிக்கும் பட்டறை உரிமையாளரும், முன்னோடி கரும்பு விவசாயியுமான ஜி. ரெங்கராஜன் மூப்பனார் கூறியது:
எங்கள் வயலில் சாகுபடியாகும் கரும்பை நாங்கள் சர்க்கரை ஆலைக்கு அனுப்புவதில்லை. அந்த கரும்பை கொண்டு எங்கள் பட்டறையில் அச்சு வெல்லம் தயாரித்து வருகிறோம். இந்த பகுதியில் கரும்பு சாகுபடிக்கு 32 ரகம் சிறப்பானதாக உள்ளது.
முறையான பருவத்தில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு, உரிய நேரத்தில் கரும்பு வெட்டும் பணி தொடங்கப்படுகிறது. வெட்டப்படும் கரும்புகள் அச்சு வெல்லம் காய்ச்சும் பட்டறைக்கு கொண்டு வரப்படுகின்றன. அங்கு கிரஷர் இயந்திரம் மூலம் கரும்பு சாறு பிழிந்தெடுக்கப்படுகிறது; அது நன்கு காய்ச்சப்பட்டு 
பாகு பதத்தில் வந்தவுடன் இறக்கப்படுகிறது. மிதமான சூட்டில் வெல்லப் பாகு மர அச்சுகளில் ஊற்றி, அச்சு வெல்லக் கட்டிகளாக வார்த்தெடுக்கப்படுகின்றன.
கடந்த 2004-05ஆம் ஆண்டுகளில் அச்சு வெல்லம் ஒரு சிப்பம் (ஒரு சிப்பம் 30 கிலோ எடை கொண்டது) சுமார் 1200 ரூபாய்க்கு விலை போனது. தற்போது ஒரு சிப்பம் சுமார் ரூ. 900 முதல் ரூ.1000 வரை மட்டுமே விலை போகிறது.
கரும்பு சாகுபடிக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படுவதால் பம்பு செட் பாசனத்தை நம்பியே கரும்பு சாகுபடி செய்கிறோம். கரும்பு சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ. 50ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த ஆண்டுகளில் ஏக்கருக்கு 50 டன் கரும்பு கண்டு முதலானது. இந்நிலையில், தற்போது இந்த பகுதியில் காட்டு பன்றிகள் அதிக அளவில் வந்து கரும்புகளை வேரோடு கடித்து நாசம் செய்கின்றன. இதனால் தற்போது ஏக்கருக்கு 35 டன் மட்டுமே கரும்பு கண்டு முதலானது. ஒரு ஏக்கர் கரும்பில் 150 சிப்பம் வரை அச்சு வெல்லம் தயாரித்த நிலை மாறி, தற்போது 100 சிப்பம் வரை மட்டுமே அச்சு வெல்லம் தயாரிக்க முடிகிறது என்றார்.

உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும் 
இந்த பகுதியில் கரும்புகளை கடித்து நாசமாக்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் காட்டு பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பெரும் நஷ்டத்திற்கு இடையிலும் இந்த தொழிலைவிட மனமில்லாமல் கடந்த 50 ஆண்டுகளாக இந்த தொழிலை குலத்தொழிலாக, குடிசைத் தொழிலாக செய்து வருகிறோம். எங்களின் நிலையை அரசு கவனத்தில் கொண்டு, அச்சு வெல்லத்திற்கு உரிய விலையை நிர்ணயம் செய்துவதுடன், அச்சு வெல்லத்தை கொள்முதல் செய்து, இந்தத் தொழில் நலிவடையாமல் காக்க வேண்டும் என்றார் ரெங்கராஜன் மூப்பனார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com