கும்பகோணம், வல்லம் கோயில்களில் குடமுழுக்கு
By DIN | Published On : 12th July 2019 07:06 AM | Last Updated : 12th July 2019 07:06 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம், கும்பகோணம் அருகேயுள்ள இணைபிரியாள்வட்டம் கிராமத்தில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.
வல்லம் தெற்குக் கடைத் தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோ பூஜை, சிறப்பு யாகங்கள், விஸ்வரூபம், கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. மேலும், ஆகம வித்வான் வேணு. பாலகிருஷ்ண பட்டாச்சாரியார் தலைமையில் கோயில் பட்டர்கள் வல்லம் சீனிவாசன் பட்டாச்சாரியார், குப்புசாமி பட்டாச்சாரியார் ஆகியோர் கலசத்துக்குப் புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில்... இதேபோல, கும்பகோணம் அருகே இணைபிரியாள்வட்டம் கிராமத்திலுள்ள விநாயகர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், மாரியம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்களில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழா விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் ஜூலை 9-ம் தேதி காலை தொடங்கியது. தொடர்ந்து, பூர்ணாஹூதி, கோ பூஜை, புனித நீர் எடுத்து வருதல் ஆகியவை நடைபெற்றன.
வியாழக்கிழமை காலை வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான விநாயகர், மகாமாரியம்மன், வரதராஜபெருமாள் சுவாமி கடங்கள் யாக சாலையிலிருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டது. பின்னர் 10.45 மணியளவில் விநாயகர், மகா மாரியம்மன், வரதராஜபெருமாள் கோயில் மூலவர் கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து மூலவர்களுக்குச் சிறப்பு அபிஷேகமும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.