அக்னி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கக் கோரிக்கை

பட்டுக்கோட்டை அருகே அக்னி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பட்டுக்கோட்டை அருகே அக்னி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட தென்னை உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் தலைவர் வழக்குரைஞர் கே.விவேகானந்தன் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:  
பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள கிழக்குக் கடற்கரை சாலை ராஜாமடம் பாலம் 1974-ம் ஆண்டு கட்டப்பட்டது. இன்று வரை ராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி செல்லும் வாகனங்களுக்கும், அதேபோல, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், காரைக்கால் செல்லும் வாகனங்களுக்கும் முக்கியச் சாலையாகவும் இந்த பாலம் உள்ளது. 
இப்பாலத்தின் மிக அருகில் உள்ள அக்னி ஆற்றில்  இருந்து இயந்திரம் மூலம் மணல் அள்ளப்படுகிறது. இதனால் மேற்படி பாலத்திற்கு மழை, வெள்ளக் காலங்களில் பெரிய அளவில் ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. மேலும், மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு கிராமத்தில் உள்ள அக்னி ஆற்றில் ஆட்களை வைத்து, ஆற்றுக்குள் மணல் சேகரித்து, இரவு முழுவதும் வாகனங்கள் மூலம் மணல் கடத்தப்படுகிறது. இதனால் அக்னி ஆறு வறண்டு 
கடல்நீர் உட்புகுந்து விட்டது. அருகில் உள்ள விவசாயிகளின் ஆழ்குழாய் கிணற்று நீரின் தன்மை உப்பாகவும்,  விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாததாகவும் மாறி வருகிறது. 
இதுதவிர, மகிழங்கோட்டை அக்னி ஆற்றின் கரையில் ஆழ்குழாய் கிணறு அமைத்து கூடலிவயல், ராஜாமடம்,  கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. அந்த நீரும் மாசுபடும் சூழல்  உருவாகியுள்ளது.  கஜா புயலால் இப்பகுதி தென்னை விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பருவகாலத்தில் மழை பெய்தாலும் அந்த மழை நீர் கடலை நோக்கியே செல்லும் நிலை உள்ளது. மேலும், ஆழ்குழாய் நீரும் 
விவசாயத்திற்கு பயன்படாத உப்பு நீராக மாறி வருவதால் தென்னை விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, அக்னி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளிக் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com