சுடுகாட்டில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு

தஞ்சாவூரில் சுடுகாட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதை எதிர்த்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம்


தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சுடுகாட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதை எதிர்த்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் நகர் விரிவாக்கப் பகுதியில் சாந்திவனம் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் தற்போது மாநகராட்சி சார்பில் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து மக்கும், மக்கா குப்பை என பிரிப்பதற்கான மையம் அமைக்கக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதை முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி. இறைவன் தலைமையில் அப்பகுதி நகர் நலச் சங்கங்களின் நிர்வாகிகள், செவ்வாய்க்கிழமை சுடுகாட்டில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சுடுகாட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து சி. இறைவன் தெரிவித்தது:
இப்பகுதியில் யாராவது இறந்தால் அவர்களது உடலை 10 கி.மீ. தொலைவில் உள்ள ராஜகோரி சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல சிரமமாக இருப்பதாகப் புகார் எழுந்தது. எனவே, 1971 ஆம் ஆண்டு நீலகிரி, மேலவெளி ஊராட்சிப் பகுதிகளுக்காகப் பொதுமக்களிடம் நிதி திரட்டி ஒரு ஏக்கர் நிலம் இப்பகுதியில் வாங்கப்பட்டது.
பின்னர் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, இப்பகுதிகளில் உள்ள விரிவாக்கப் பகுதிகள் அனைத்தும் நகராட்சியுடன் இணைக்கப்பட்டன.
இந்தப் பகுதியில் 36 முதல் 41 வரையிலான வார்டுகளில் அடங்கிய 80 குடியிருப்பு நலச் சங்கங்கள் ஒன்றிணைந்து சாந்திவனம் என்ற இந்த சுடுகாட்டை உருவாக்கியுள்ளன. இதில் இந்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு தனித்தனியாக உடல் தகனம், அடக்கம் செய்யும் இடங்கள் உள்ளன.
சுடுகாட்டுக்காக உருவாக்கப்பட்ட இந்த இடத்தில் தற்போது மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை தரம் பிரிக்க கட்டுமானப் பணி மேற்கொள்கிறது. சுடுகாட்டில் அதற்கான பணிகளை மட்டுமே செய்ய வேண்டும். குப்பைகளை வேறு எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தரம் பிரித்துக் கொள்ளலாம். ஆனால் சுடுகாடை வேறு எங்கும் அமைக்க முடியாது. இதை மாநகரட்சி நிர்வாகம் கருத்தில் கொண்டு சுடுகாட்டில் மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார் இறைவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com