ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை 9-இல் பேரணி நடத்த முடிவு: காவிரிப் படுகை பாதுகாப்பு இயக்கம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் மாவட்டத் தலைமையிடங்களில் விவசாயிகள் மற்றும்


தஞ்சாவூர்: ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் மாவட்டத் தலைமையிடங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கக்கூடிய பேரணியை நடத்துவது என காவிரிப் படுகை பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.
காவிரிப் படுகையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படும் விவசாய சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
தமிழ்நாட்டில் காவிரிப் படுகையை முற்றிலும் அழித்தொழிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. ஹைட்ரோகார்பன், மீத்தேன், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கும், ஓஎன்ஜிசிக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
மத்திய அரசு 2016 ஆம் ஆண்டு மாற்றியமைத்துள்ள கொள்கை அடிப்படையில் ஒரு பொருளை எடுப்பதற்கு அனுமதி பெற்றுக் கொண்டு, எல்லா வகையான பெட்ரோலியப் பொருட்களையும் எடுத்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. இத்தகைய பொருட்களை எடுப்பதற்கு விரிசல் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் நில வளம், நீர் வளம் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்படும். இதனால் ஒரு கோடிக்கும் அதிகமான காவிரி டெல்டா மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். உணவு உற்பத்தியில் மிகப் பெரிய சரிவு ஏற்படும். நிலத்தடி நீர் மாசுபட்டு குடிதண்ணீருக்கே மக்கள் அல்லல்படும் சூழ்நிலை உருவாகும்.
காவிரிப் படுகை மக்கள் வாழத் தகுதியற்றதாக மாறிவிடும் என்ற நிலையில் பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்துள்ளதை ரத்து செய்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு விடப்பட்டுள்ள ஏலத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக தமிழகச் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் காவிரிப் படுகை பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் செயல்படுவது, ஒரு ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்திக் கொள்வது, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் மாவட்டத் தலைமையிடங்களில் ஜூலை 9-ம் தேதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கக்கூடிய பேரணிகளை நடத்துவது, ஒரு வார காலம் இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை  மேற்கொள்வது, 
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 8 ஆண்டுகளாகக் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்காத மத்திய, மாநில அரசுகளை வன்மையாகக் கண்டிப்பது, காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரழிவை உண்டாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி ஜூன் 23-ம் தேதி மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை நடைபெறவுள்ள மனித சங்கிலி போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாநிலப் பொதுச் செயலர் பெ. சண்முகம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாநில பொதுச் செயலர் வே. துரைமாணிக்கம், திமுக விவசாய அணி மாநிலச் செயலர் ஏ.கே.எஸ். விஜயன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன், அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு மாநில அமைப்பாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com