இளைஞர்கள் முயற்சியால் பேராவூரணி பெரியகுளம் தூர்வாரும் பணி தொடக்கம்
By DIN | Published On : 25th June 2019 08:38 AM | Last Updated : 25th June 2019 08:38 AM | அ+அ அ- |

பேராவூரணி பெரியகுளத்தை தூர்வாரும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 564 ஏக்கர் பரப்பளவு; 9 மடைகள் கொண்ட பெரியகுளம், பல ஆண்டுகளாக தூர்வாராததாலும், ஆக்கிரமிப்பாலும் வெகுவாக சுருங்கிவிட்டது.
மேலும், நகரில் உள்ள குப்பைகள், கட்டடக் கழிவுகள், புயலால் சாய்ந்த மரங்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டு, நீர்வரத்து பாதைகள் அடைக்கப்பட்டு, மணல் மேடிட்ட நிலையில் மரங்களும், புதர்களும் மண்டிய நிலையில், பல ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு பயன்பட்டு வந்த பெரியகுளம் தற்போது தண்ணீரின்றி வறண்டு காட்சி அளிக்கிறது.
ஒரு காலத்தில் விவசாயத்துக்கும், கால்நடைகள் தாகம் தணிக்கவும், நிலத்தடி நீர்மட்டம் குறையாமல், ஆழ்துளைக் கிணறுகளுக்கு முக்கிய நீராதாரமாகவும் விளங்கிய பெரியகுளம் பயன்பாடின்றி இருப்பது கண்டு இப்பகுதி இளைஞர்கள் கவலை அடைந்தனர்.
இதையடுத்து, கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினர்.
பெரியகுளத்தை பயன்படுத்தும் முக்கிய பாசனதாரர்களான பொன்காடு, முடப்புளிக்காடு, பழைய பேராவூரணி கிராமத்தார்கள், மற்றும் இளைஞர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து, பெரியகுளத்தை தூர்வாரும் முயற்சிக்கு ஆதரவு திரட்டினர். இந்நிலையில், இளைஞர்கள் ஒன்றுகூடி, கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில், ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, திங்கள்கிழமை காலை பெரியகுளம் தூர்வாரும் பணி தொடங்கியது. இதில் சங்க தலைவர் ராம்குமார், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் நவீன், நிமல் ராகவன், சேந்தங்குடி தங்க.கண்ணன், கொத்தமங்கலம் பாஸ்கர் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் இந்திரா அன்பழகன், என். அசோக்குமார், வர்த்தக கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், செயலாளர் ஏ.டி.எஸ்.குமரேசன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒரு ஜேசிபி இயந்திரம் மற்றும் 3 டிராக்டர் வாகனங்களை பயன்படுத்தி மண் எடுத்து முதற்கட்டமாக கரைகளைப் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
முதல்நாள் தொடங்கி நடக்கும் பணிக்கு ஆகும் செலவான ரூ. 20 ஆயிரத்தை பொன்காடு பகுதி இளைஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், இரண்டாம் நாள் செலவை நீலகண்டன் என்பவர் ஏற்றுள்ளார்.
ஒவ்வொரு குளமாக தூர்வாரி, மீண்டும் நீர்வளத்தை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து நீர்நிலைகளை பாதுகாக்கவும் சங்கல்பம் செய்திருப்பதாக கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்ததோடு, கரைகளைப் பலப்படுத்த மரக்கன்றுகளை நட்டு, தொடர்ந்து அவற்றை பராமரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
ரூ.1லட்சம் நிதியுதவி
பேராவூரணியைச் சேர்ந்தவரும், தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வருபவருமான குசேலராகவன்சிவகுமார் பெரியகுளம் தூர்வாரும் பணிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார்.