முறைகேடாக மணல் அள்ளப்படுவதாக புகார் எதிரொலி: அக்னியாற்றில் 5 கி.மீ. நடந்து சென்று ஆய்வு செய்த ஆட்சியர்,எஸ்.பி.
By DIN | Published On : 25th June 2019 08:35 AM | Last Updated : 25th June 2019 08:35 AM | அ+அ அ- |

முறைகேடாக மணல் அள்ளப்படுவதாக வந்த புகார்களின் தொடர்ச்சியாக, பட்டுக்கோட்டை அருகேயுள்ள அக்னியாற்றில் 5 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று ஆய்வு செய்தார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
பட்டுக்கோட்டை வட்டம், மாளியக்காடு, தொக்காலிக்காடு, மகிழங்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள அக்னியாற்றில் முறைகேடாக மணல் அள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, புகார் கூறப்பட்டப்பட்ட பகுதிகளில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆகியோர் அதிவிரைவு காவல்படையுடன் சென்று திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இருவரும் மாளியக்காடு பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று அக்னியாற்றில் முறைகேடாக மணல் அள்ளப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டனர். அக்னியாற்றில் முறைகேடாக மணல் எடுப்பவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், முறைகேடாக மணல் அள்ளப்படும் பகுதிகளில் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளவும் வருவாய்த்துறை, காவல்துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அ.பூங்கோதை, பட்டுக்கோட்டை காவல் துணைக்கண்காணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள் பிரகாசம் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.