கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு

கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்

கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலச் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன்.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் கருத்தாய்வு மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற கு. பாலசுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
தமிழக அரசுப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக அரசு நிர்வாகத்தில் சுமார் 5 லட்சம் பணியாளர்கள் நிரந்தர ஊதிய விகிதம் இல்லாதவர்கள். இவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களுடைய பிரச்னைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பணியிடங்களில் அமலில் உள்ள அயலாக்கப் பணி முறையை ரத்து செய்துவிட்டு, நிரந்தர பணியமர்த்தம் செய்ய வேண்டும். அரசுப் பணியாளர்களின் நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட அம்சங்களில் வெளிப்படைத்தன்மை குறைந்து வருகிறது. இதனால், முறைகேடுகளும், குறைபாடுகளும் அதிகரிக்கிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் என்ற நீதிமன்றத் தீர்ப்பு பல்வேறு துறைகளில், நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், பணியாளர்கள் பாகுபாடான சூழ்நிலைகளிலேயே பணியாற்றி வருகின்றனர். 
இக்கோரிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளிடமும் மனுவாக அளிக்க உள்ளோம். இதை ஏற்று உறுதி அளிக்கும் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் பாலசுப்பிரமணியன்.
அப்போது, சங்க மாநிலத் தலைவர் பி.கே. சிவக்குமார், மாவட்டத் தலைவர் என். வெங்கடாசலம், செயலர் சா. ராமச்சந்திரன், பொருளாளர் கே. செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com