பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது: 30,030 மாணவர்கள் பங்கேற்பு
By DIN | Published On : 02nd March 2019 08:25 AM | Last Updated : 02nd March 2019 08:25 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 107 மையங்களில் 30,030 பேர் எழுதுகின்றனர் என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு நடைபெற்ற வகுப்புகளை பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
மாவட்டத்தில் உள்ள 105 மையங்களில் 13,130 மாணவர்களும், 16,426 மாணவிகளும் என மொத்தம் 29,556 மாணவ, மாணவிகளும், தனித் தேர்வர்கள் இரு மையங்களில் 474 பேரும், என மொத்தம் 30,030 மாணவ , மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
மாவட்டத்தில் 78 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இம்மாணவர்கள் தேர்வு எழுத வசதியாகத் தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேச இயலாதோர், மனவளர்ச்சி குன்றியோர் உள்ளிட்ட மாணவர்களுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், சொல்வதைக் கேட்டு எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 7 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 17 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு நடைபெறும் மையங்களில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் என 2,668 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிக் கல்வித் துறையில் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு 224 பறக்கும்படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தேர்வு பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதைக் கண்காணிக்கத் தமிழக அரசால் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கே. செல்வகுமார் மேற்பார்வை அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றார் ஆட்சியர்.
அப்போது, முதன்மைக் கல்வி அலுவலர் பெ. சாந்தா உள்ளிட்டார் உடனிருந்தனர்.