ரூ. 6.21 கோடி மதிப்பில் 100 உழவர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள்
By DIN | Published On : 04th March 2019 08:57 AM | Last Updated : 04th March 2019 08:57 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் நூறு உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ. 6.21 கோடி மதிப்பிலான வேளாண் கருவிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசியது:
மாவட்டத்தில் வேளாண்மைத் துறை சார்பில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ், 100 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், தோட்டக்கலைத் துறை மூலம் 5 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண்மையில் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் தலா ரூ. 5 லட்சம் தொகுப்பு நிதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பண்ணைக் கருவிகளான பவர் டில்லர், டிராக்டர், நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம் போன்றவை வழங்கப்படுகின்றன. இவ்விழாவில் வேளாண்மைத் துறை மூலம் நூறு குழுக்களுக்கு அரசின் ரூ. 5 கோடி தொகுப்பு நிதி உதவியுடன், ரூ. 6.21 கோடி மதிப்பிலான 261 வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டக்கலைத் துறை மூலம் அரசின் ரூ. 25 லட்சம் தொகுப்பு நிதி உதவியுடன், 5 குழுக்களுக்கு ரூ. 26.35 லட்சம் மதிப்பிலான 14 வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
கூட்டுப் பண்ணையத் திட்டம் மூலம் செயல்படும் இக்குழுவினர், சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்களான விதைகள், உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை கூட்டாக வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். வேளாண்மைத் துறைக்குக் கடந்த ஆண்டை விட நிகழாண்டு தமிழக முதல்வர் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார் அமைச்சர். ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், மக்களவை உறுப்பினர்கள் கு. பரசுராமன், ஆர்.கே. பாரதிமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.