பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்துவது கண்டனத்துக்குரியது

பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காவல் துறையினர்

பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காவல் துறையினர் அச்சுறுத்துவது கண்டனத்துக்குரியது என கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைமைச் செயற் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஏமாற்றி, அவர்களைப் பாலியல் பணயக் கைதிகளாக வைத்திருந்து சீரழித்த கயவர்கள் குறித்து வரும் தகவல்கள், நெஞ்சைப் பதற வைக்கின்றன. பிடிபட்டுள்ள நான்கு பேரையும் தமிழ்நாடு அரசும், காவல் துறையும் காப்பாற்ற முயல்வதாக வரும் தகவல்கள் கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
பிடிபட்ட நான்கு பேரையும் உடனடியாகக் காவலில் எடுத்து விசாரித்து, அவர்களின் பின்னுள்ள அரசியல் புள்ளிகள் மற்றும் அலுவலர்கள் யாரெனக் கண்டறிய வேண்டியதில் முனைப்பு காட்டாத காவல் துறை, "பிடிபட்டவர்களுக்கு அரசியல் பின்னணியே இல்லை"என அறிவிப்பது வேடிக்கையாக உள்ளது. 
பொள்ளாச்சி புறநகர் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனின் இந்த அறிவிப்பே, இவ்வழக்கில் அரசியல் பின்னணி உள்ளதென பலரையும் ஐயப்பட வைத்துள்ளது.
ஆளுங்கட்சி பிரமுகர்களைக் காப்பாற்றி, புகார் அளிக்க முன்வரும் பாதிக்கப்பட்ட பெண்களை அச்சுறுத்தும் காவல் துறையினரின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. காவிரிப் படுகையையும், கடலோரத்தையும் ஒட்டுமொத்தமாக நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என திருக்கரவாசல், கரியாப்பட்டினம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைக் கைது செய்வதும், போலி வழக்குகள் பதிவு செய்வதும் கண்டிக்கதக்கது. இதில் கைது செய்யப்பட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
நில வளத்தையும், நீர் வளத்தையும் காப்பாற்ற காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, இப்பகுதியில் எண்ணெய், கேஸ், நிலக்கரி எடுக்கும் பணிகளை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச் செயலர் கி. வெங்கட்ராமன், பேரியக்கப் பொருளாளர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் பழ. ராசேந்திரன், நா. வைகறை, க. அருணபாரதி, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. முருகன், க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி அம்மாள், தை. செயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com